’கோரிக்கைகள் இருக்கும் வரையில் உங்கள் தயவு எங்களுக்குத் தேவையில்லை! (மெஹ்ர்பானி நக்கோ! ஹக்க ஹவெத்!)

கடன் தள்ளுபடி, நில ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கின்ற அரசாங்கத்தை எதிர்த்து அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் என்ற பதாகையின் கீழ் ஏறத்தாழ 30000 பேர் நாசிக்கில் இருந்து கிளம்பி மும்பை வரை 180கிமீ கால்நடைப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தனர். தங்களுடைய உரிமைகளைக் கேட்டு அந்த விவசாயிகள் திங்களன்று மும்பைக்கு அணிவகுத்து வருகை தந்தனர், சலுகைகளைக் கேட்டு அல்ல.

விவசாயிகள் சங்கத்தால் ‘நீண்ட அணிவகுப்பு’ என்று பெயரிடப்பட்ட இந்தப் பேரணி மார்ச் 6 அன்று நாசிக்கில் தொடங்கியது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, மகாராஷ்டிரா சட்டமன்றத்தை முற்றுகையிடுவது என்பது அவர்களது திட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவரும் கல்வான் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜுவா பாண்டு காவிட், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் நவாலே உள்ளிட்ட மற்ற தலைவர்களையும் உங்களால் இந்த பேரணியின் முன்னால் பார்க்க முடியும்.

‘மகாராஷ்டிரா ராஜ்ய கிசான்’ என்ற பதாகை ஒன்றை ஏந்திக் கொண்டு சில விவசாயிகள் அவர்களைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் கோரிக்கை அட்டைகள், தண்ணீர் பாட்டில்கள், பைகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை தங்களிடம் வைத்திருக்கும் விவசாயிகளின் நீண்ட வரிசை தொடர்கிறது. எரிக்கின்ற வெயில், தூரம் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாத தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் நடந்து கொண்டிருக்கும் போது, உடன் வரும் வாகனங்களில் இருந்து முழக்கங்களும், பாடல்களும் ஒலித்துக் கொண்டே வருகின்றன.

நான் மார்ச் 10 சனிக்கிழமையன்று சுமார் 40 கிமீ அவர்களுடன் நடந்து சென்றேன். கடுமையான வெப்பம்  என்னைத் தாக்கியதால் நான் புனேவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. ஆனால் இந்த சூப்பர்மனிதர்கள் தங்களுடைய வயலில் கடினமாக உழைக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதால் அவர்களுடைய நடையில் எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை. இவையனைத்திற்கும் நடுவே, வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், என்னுடைய தலையை துணி கொண்டு மூடிக் கொள்ளுமாறு சில வயதான பெண்கள் குறைந்தபட்சம் மூன்று முறையாவது என்னைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

வழக்கமான இடைவெளியில் தண்ணீர் லாரிகள் வந்து கொண்டிருந்தன. அப்போது விவசாயிகள் தங்களுடைய பாட்டில்களை நிரப்புவதற்கு உடனடியாக ஓடினார்கள்.

தங்களுடைய பயணம் முழுமையும் இந்த விவசாயிகள் காட்டிய கட்டுப்பாடு பாரட்டத்தக்கதாக இருந்தது. எந்த வன்முறை நிகழ்வுகளும் இல்லாமல் இந்த நீண்ட பயணத்தை அவர்களால் முடிக்க முடிந்துள்ளது. உணவு தயாரிப்பது, அதனை விநியோகிப்பது ஆகியவற்றிலும் அதே போன்ற கட்டுப்பாடு அவர்களிடம் இருந்தது. ஒவ்வொரு உணவிற்கும் முன்னதாக, விவசாயிகள் குழு ஒன்று அந்தப் பேரணியிலிருந்து விலகிச் சென்று சுத்தமான இடம் ஒன்றைக் கண்டறிந்து மற்றவர்கள் வருவதற்கு முன்பாக தாங்கள் கொண்டு வந்த பொருட்களைக் கொண்டு அங்கே சமைக்க ஆரம்பிக்கிறார்கள். எந்த பெரிய கூடாரங்களும் இல்லாததால், வெயிலில் நின்று கொண்டே கிச்சடி சாப்பிடுகிறார்கள். இசைக்கலைஞர்கள் பாரம்பரியப் பாடல்களைப் பாடுகிறார்கள், இந்தக் கடினமான பயணத்திற்குப் பிறகும் களைப்படையாத சில விவசாயிகள் நடனமாடுகிறார்கள்.  இது ஒரு அரங்கேற்றப்பட்ட போராட்டம் அல்ல. சோகம் நிரம்பிய விவசாய சமூகத்தின் உண்மையான போராட்டம்.

தங்களுடைய கோரிக்கைகளுக்காக அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் நம்பகத் தன்மையை எந்தவொரு தகவல் தொழில்நுட்பக் குழுவும் அசிங்கப்படுத்த முயலுவதை அனுமதிக்கக் கூடாது. கடினமான போரில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இந்த தைரியமான பெண்களுக்கும், ஆண்களுக்கும் நமது ஆதரவை அளிப்போம்..

அவர்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற பிரச்சினைகள் ஒன்றும் புதியவை அல்ல. நீண்ட காலமாகவே விவசாயிகள் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். முதலாவது கோரிக்கையாக, கடனில் ஒரு பகுதியை மட்டும் தள்ளுபடி செய்யாமல், முழுமையான கடன் தள்ளுபடியை விவசாயிகள் கோருகின்றனர். மகாராஷ்டிரா அரசாங்கம் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்த போதிலும், அந்த அறிவிப்பிற்கான பலன்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. வனஉரிமைகள் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிலத்திலும் அவர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. ஏற்கனவே காடுகளில் பயிர் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் குடும்பத்திற்கு இந்தச் சட்டத்தின் படி, 4 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். இருப்பினும், இவ்வாறு குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட நில அளவானது,  4 ஹெக்டேர் பயிர் செய்து கொண்டிருப்பவர்களுக்குகூட போதுமானதாக இல்லை. நாசிக் மற்றும் தானே பகுதிகளில் உள்ள ஆறுகளை இணைப்பதன் மூலமாக பழங்குடியினருக்குச் சொந்தமான நிலங்கள் மூழ்கடிக்கப்படுவது அடுத்த பிரச்சனையாக் இருக்கிறது. சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையை அமுல்படுத்தாமல் இருப்பது போன்ற பழைய பிரச்சினைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சனைகள் அனைத்தும் சேர்ந்து விவசாயிகள், அவர்களது குடும்பங்கள் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

இது குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்திருந்த போதிலும், மார்ச் 10 சனிக்கிழமை வரை அவர்களிடம் இருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்று நவாலே என்னிடம் கூறினார். விவசாயிகளின் கோரிக்கைகள் மீது இன்னும் கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசாங்கமும், நமது சமூகமும் விவசாயிகளுக்கு எதிராக எவ்வாறு இருக்கின்றன என்பதற்கு ஆதாரமாக இந்தப் பேரணி இருக்கிறது. விவசாயம் என்பது ஏற்கனவே ஒரு கடினமான வேலை. அந்த கடின உழைப்பிற்கும் மேலாக, தங்களுடைய உரிமைகளைப் பெறுவதற்காக இந்தக் கொளுத்தும் வெயிலில் 180கிமீ தூரம் அவர்கள் நடக்க வேண்டிய நிலைமைதான் இங்கே இருக்கிறது. திறந்த வெளியில் அவர்கள் தங்களுடைய உணவை உண்ணுவதைப் பார்ப்பது மனதிற்குச் சங்கடமாக இருக்கிறது. இத்தகைய துன்பங்களுக்கு உள்ளாகிறவர்களாக, நமக்கு உணவுகளை அளிப்பவர்கள் இருக்கக் கூடாது. இந்தப் பேரணியை அவர்கள் நடத்தியிராத வகையில், அவர்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் சிறிது முன்னாடியே நிறைவேற்றி இருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். இன்று அவர்கள் மும்பைக்கு வந்து சேரும் போது, அவர்களுடைய போராட்டம் தர்க்கரீதியான முடிவுக்கு வரும், அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றே நான் நம்புகிறேன்,

நன்றி : https://thewire.in/rights/i-walked-40km-with-the-farmers-in-maharashtra-heres-what-i-learnt

 தமிழில் – முனைவர் தா.சந்தரகுரு – விருதுநகர்

Leave A Reply

%d bloggers like this: