மதுரை:
தேனி மாவட்டம் குரங்கணி தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார். இதையடுத்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்ற சுற்றுலா சென்றபோது காட்டுத்தீயில் சிக்கியதில் 9 பேர் இறந்தனர். தீயில் சிக்கி பலத்த காயமடைந்த 15 பேர் மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் 9 பேர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அதில்
ஜெயஸ்ரீ கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மீனா என்ற பெண் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதில் அரசு மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நிஷா என்ற பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தார். அவரது உடல் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் 90 சதவீதம் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா சிகிச்சை பலனின்றி செவ்வாய் அன்று இறந்தார். திவ்யாவுடன் மலையேற்றத்துக்கு சென்ற அவரது கணவர் விவேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது திவ்யாவும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். திவ்யா இறந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

ஈரோட்டில் கல்லூரியில் பணிபுரிந்து வந்த திவ்யாவும், அவரது கணவர் விவேக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்துள்ளனர். 10 நாள்களில் கணவன், மனைவி இருவரும் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி இறந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா இறந்ததை அடுத்து குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply