மஹாரஷ்டிராவில் ஒரு வாரமாய் நடந்து மும்பை வந்த இத்தனை ஆயிரம் விவசாயிகளுக்கு தொப்பிகளுக்கு எவ்வளவு செலவாகி இருக்கும், தண்ணீருக்கு எவ்வளவு செலவாகி இருக்கும், உணவுக்கு எவ்வளவு செலவாகி இருக்கும், என்று கணக்குப் போட்டு சில கோடிகளாகி இருக்கும் என்று பிஜேபியினர் கூறி வருகின்றனர். அந்தக் கோடிகளைக் குறிப்பிட்டு, அந்த விவசாயிகளுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது, யாருடைய தூண்டுதல் இதன் பின்னே இருக்கிறது என்றெல்லாம் ஆராய்ந்து இறுதியில் ’தேச விரோதிகள்’ என்னும் வழக்கமான முத்திரையைக் குத்தத் துணிந்திருக்கின்றனர்.

ஆறு நாட்களாக அந்த விவசாயிகள் 180 கி.மீ நடந்து வந்திருக்கின்றனர். இவ்வளவு தூரம் நடந்து வர வேண்டும் என்றால் எந்த பிரச்சினைகள் அவர்களை நடக்க வைத்தன என்று அவர்கள் பார்க்கவில்லை.

அந்த ஆறு நாட்களும், அவர்கள் தங்கள் தினக்கூலி வருமானத்தை இழந்து வந்திருக்கின்றனர். அந்த இழப்பையும் மீறி எந்த வைராக்கியம் அவர்களை நடக்க வைத்தது என்று அவர்கள் பார்க்கவில்லை.

தொப்பியை பார்த்த காமாலைக் காவிகளுக்கு பிய்ந்த செருப்புகளோடு, வெடித்த பாதங்களோடு நிலமெல்லாம் நடந்து வந்த அந்த எளிய மக்களின் கால்கள் தெரியவில்லை. ரணங்களோடும், வலியோடும் அவர்களை எந்த நம்பிக்கை நடக்க வைத்தது என்று அவர்கள் பார்க்கவில்லை.

பெரும் நதி போல் வந்த விவசாயிகளுக்கு மும்பை நகரத்து மக்கள் அளித்த ஆதரவையும், அரவணைத்துக் கொண்ட பிரியத்தையும் அவர்கள் பார்க்கவில்லை.

பணம் வாங்கி கார்ப்பரேட்களுக்கு சலுகை செய்கிறவர்களுக்கு பணம் கொடுத்து மக்களிடம் ஓட்டு வாங்குபவர்களுக்கு, எதையும் நேராகப் பார்க்கத் தெரியாது. முடியாது.

காவிகள் பார்க்கக் கூசும் வெளிச்சமானவர்கள் அந்த போராளிகள், எங்கள் விவசாயத் தோழர்கள்!

Mathava Raj

Leave A Reply

%d bloggers like this: