புதுதில்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் 12 நாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திங்களன்று பாட்டியலா நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கார்த்தி சிதம்பரத்திற்கு மார்ச் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் நடைபெற்ற சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய முடிவெடுத்தது.
முந்திக் கொண்ட கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தில்லி உயர் நீதிமன்றம், மார்ச் 20-ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்தது.
இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்யும் என்பதை எதிர்பார்த்திருந்த கார்த்தி சிதம்பரம், இவ்விவகாரத்தில் தனது தரப்பு கருத்தையும் கேட்ட பிறகே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply