எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்                                                                                                                                                                 தகவல் தொழில்நுட்பம் வளர வளர பிரச்சனைகளும் புதிய புதிய வடிவங்களில் வந்து கொண்டி இருக்கின்றன. ரான்சம்வேர் போன்ற வைரஸ் தாக்குதல்கள் மின்னஞ்சல்கள் மூலமாகப் பரவியது போல இன்னும் பல வகை களவாடும் மின்னஞ்சல்கள் இணையவெளியில் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன.நமக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களை சேவை நிறுவனங்கள் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தி சோதனை செய்துதான் வழங்குகின்றன. இருப்பினும் நேரடியாக தீய நிரல்களைக் கொண்டு வராமல் மனதை இழுக்கும் வகையிலோ நமக்கு பரிச்சயமான நிறுவனப் பெயர்களைப் பயன்படுத்தியோ போலியான தளங்களுக்கு நம்மை இழுத்துச் சென்று தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றன. இத்தகைய தீய நோக்கம் கொண்ட மின்னஞ்சல்களை பிஷ்ஷிங் மெயில் என்று குறிப்பிடுகின்றனர். நமக்கு வரும் மின்னஞ்சல் பிஷ்ஷிங் மெயிலா என்பதை எப்படி அறிந்து கொள்வது?
பெயரை சரிபார்க்கவும்

உங்களுக்கு வந்திருக்கும் மின்னஞ்சல் தீய நோக்கம் கொண்டதாக இருப்பின், அதனை உருவாக்கியவர் தங்கள் நிறுவன (அ) வங்கியின் இணைய முகவரியுடன் கூடிய மின்னஞ்சல் முகவரியை கொண்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். உதாரணமாக [email protected] என்ற முறையில் அந்த முகவரி இல்லாமல் இலவச மின்னஞ்சல் வழங்கும் ஜிமெயில், யாகூ, அவுட்லுக் போன்ற ஏதேனும் தளங்கள் மூலமாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். உங்கள் வங்கி அல்லது அறிமுகமான நிறுவனங்கள் பெயர்களில் வரும் மின்னஞ்சல்களைத் திறக்கும் முன்பு அது பிரத்யேக முகவரிதானா அல்லது போலியாக உருவாக்கப்பட்டதா என்பதை சரிபார்த்து உறுதி செய்த பின்னரே திறக்கவும். அதற்கு முன்பாக அதில் உள்ள இணைப்புகள் எதையும் கிளிக் செய்யாதீர்கள்.

விரைந்து செயல்படத் தூண்டுதல்
உங்கள் அக்கவுண்ட் பிரச்சனையில் உள்ளது, உடனடியாக கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து உறுதி செய்யுங்கள் என்பது போல, உங்களை பயமுறுத்தி வலை விரிக்கும் மின்னஞ்சல்களிடம் கவனமாக இருக்கவும்.அவசரப்பட்டு கிளிக் செய்தால் போலியான இணையதளத்தில் உங்களைப் பற்றிய விபரங்களையும், கணக்கு விபரங்களையும் வாங்கிக் கொண்டு வினாடியில் அனைத்தையும் களவாடிச் சென்று விடுவர். இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்தால் முகவரி விபரங்களை சரிபார்க்கவும், சந்தேகம் இருந்தால் அந்த நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்வதுதான் நல்லது.

இலக்கணப் பிழை
நிறுவனங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் ஒன்றுக்கு பலமுறை சரிபார்க்கப்பட்டு பிறகே அனுப்பப்படும். அதில் உள்ள செய்திகளைப் படித்தால் அவை தெளிவான, உயர்தர எழுத்து நடையைக் கொண்டிருக்கும். ஆனால், தீய நோக்கம் கொண்டவர்களின் மின்னஞ்சல் செய்திகளில் வார்த்தைப் பிழை, எழுத்துப் பிழை போன்றவற்றை நீங்கள் கண்டால் உடனே உஷாராகிவிடலாம். பொதுவான செய்தி
நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பும்போது அவர்களின் பெயரைக் குறிப்பிட்டே அனுப்பும். ஆனால், களவாடும் நோக்கம் கொண்ட மின்னஞ்சல்கள் ஒருவருக்கு மட்டும் அனுப்பாமல் நூற்றுக்கணக்கானோருக்கு அனுப்பப்படுவதால் ‘டியர் கஸ்டமர்’, ‘டியர் கஸ்டமர்’, ‘டியர் யூசர்’ போன்ற எளிய வாக்கிய அமைப்பையே தொடக்கமாகக் கொண்டிருக்கும். இத்தகைய பொதுவான சொற்களோடு வந்தால் கவனமாக இருக்கவும்.

இணைய இணைப்புகள்
எச்சரிக்கும் வாசகங்களுடன் பிரச்சனையை சரிசெய்ய இங்கே கிளிக் செய்யவும் என்று கொடுத்து நம்பும்படியாக முகவரி தந்திருப்பார்கள். ஆனால் கிளிக் செய்தால் வேறு ஒரு முகவரிக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். எனவே, இதுபோன்ற இணைப்புகளைக் கிளிக் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. மின்னஞ்சல் செய்தி உண்மையா என்பதை அறிய அந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது பிரௌசர் மூலமாக உங்களிடம் உள்ள நிறுவன முகவரியை உள்ளிட்டு சரிபார்க்கவும். எக்காரணம் கொண்டும் இணைப்பாகக் கொடுக்கும் முகவரிகளை கிளிக் செய்வதோ அல்லது காப்பி செய்து பிரௌசரில் பேஸ்ட் செய்தோ திறக்க வேண்டாம்.

Leave A Reply

%d bloggers like this: