நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையானது புகழ் பெற்ற சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் 280 கி.மீ பரப்பளவில் கொல்லிமலை அமைந்துள்ளது. சமவெளி பகுதியிலிருந்து 26 கி.மீ பயணத்தில் 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த கொல்லிமலையில் புகழ் பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில், முருகன் கோவில், 600 அடி உயரத்தில் இருந்து நீர் விழும் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி மற்றும் வாசலூர்பட்டி படகுத்துறை ஆகியவை உள்ளன.

இந்த சுற்றுலா தளங்களை கண்டுகளிக்க சேலம், கரூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இவ்வாறு கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், விலங்குகள் போன்ற சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவில் இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், நீண்ட காலமாக தாவிரவியல் பூங்கா மட்டும் முறையாக திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், கொல்லிமலைக்கு தினமும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்து விட்டு இறுதியாக தாவிரவியல் பூங்காவை பார்க்க வருகின்றனர். ஆனால், தாவரவியல் பூங்கா திறக்கப்படாமல் பூட்டியே இருப்பதால் தாவரவியல் பூங்காவை பார்வையிட முடியாமல் ஏமாற்றதுடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் முறையாக தாவிரவியல் பூங்காவை திறந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

தனியாரிடம் ஒப்படைப்பு? இதுதொடர்பாக வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்கையில், இந்த தாவரவியல் பூங்காவில் போதிய தண்ணீர் வசதிகள் இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மேலும், இப்பூங்காவை பராமரிக்கவும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இதன்காரணமாகவே பூங்கா திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இன்னும் ஒரிரு மாதங்களில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு பூங்காவை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

-வீரமணிகண்டன்

Leave A Reply