பேராசிரியர் கே. ராஜு
அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை “உலக அளவில் மக்களுக்கு முதல் எதிரி” என கொசுவை அடையாளம் காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டு கடக்கும்போதும் கொசுக்கடியினால் உருவாகும் புதியவகை நோய்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம்.மலேரியா நோயை நாம் இன்னும் முற்றாக ஒழித்தபாடில்லை. நம் அருகில் உள்ள இலங்கை அதில் வெற்றியடைந்திருக்கிறது. தற்போது கொசுக்களினால் உருவாகும் டெங்குவும் சிக்குன்குனியாவும் நம் ஊருக்கு அடிக்கடி வந்து போகும் விருந்தாளிகளாக ஆகிவிட்டன. இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் அவற்றின் வருகையையும் அவற்றினால் வேகமாக அதிகரித்து வரும் உயிரிழப்புகளையும் பற்றி அறிவிப்பது வழக்கமாகியிருக்கிறது. பருவகாலத் தொடக்கம் உற்சாகத்தைக் கொணர்வதற்குப் பதிலாக அந்தப் பருவத்தில் பரவும் கொசுக்கடி நோய்கள் காரணமாக துயரத்தையே கொணர்கின்றன. உடல்நலப் பராமரிப்பு என வரும்போது உலகில் உள்ள 188 நாடுகளில் இந்தியா கீழே உள்ள 45 நாடுகள் பட்டியலிலேயே இடம் பிடிக்கிறது.

ஏறவேண்டிய பேருந்தோ, ரயில் வண்டியோ கிடைக்கத் தாமதம் ஆனால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அங்கிருக்கும் பெஞ்சுகளில் படித்து உறங்குவது நம் வழக்கம். இந்தக் கட்டுரையை எழுதுபவரே 1980-களில் அப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்தான். ஆனால் இன்று அப்படி பொது இடங்களில் நிம்மதியாகத் தூங்க கொசு பெருமகனார் நம்மை அனுமதிப்பதில்லை. கொசுக்களின் எண்ணிக்கை அந்தளவுக்கு பெருகிவிட்டது. (இன்றும் கொசுக்கடியைத் தாங்கிக் கொண்டு பொது இடங்களில் உறங்குபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள).

சுற்றுப்புறத் தூய்மை இல்லாத இடங்களிலேயே கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகமாக நடைபெறுகிறது என்பது நாம் அறிந்த செய்திதான். போதுமான அளவுக்கு வீட்டு வசதி, தண்ணீர் விநியோகம், சுத்தமான சூழல், திடக்கழிவு மேலாண்மை வசதிகள் இன்மையோடு மக்களுடைய புரிதல், அணுகுமுறை, பயிற்சி இன்மையும் சேர்ந்து கொசுக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகுவதற்குக் காரணமாகிவிடுகின்றன. பூமியின் வெப்பநிலை உயர்வு கூட கொசுக்கள் பெருகுவதற்கு வழிவகுக்கிறது. கொசுக்கள் தொல்லை என்பது மனிதர்களால் உருவானதே என சுட்டிக் காட்டும் சென்னை உயர்நீதிமன்றம், கட்டுமான விதிகளை மீறி கட்டடங்கள் எழுப்பப்படுவதைத் தடுக்க முயலாத அரசின் பாராமுகத்தைக் கண்டிக்கிறது. ஏரிகள், குளங்கள், நீர்வழிப்பாதைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து எழுப்பப்படும் கட்டடங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு வழிவகுப்பதோடு ஆங்காங்கு நீர் அடைப்புகளை உருவாக்கிவிடுகின்றன. இதற்கும் ஆட்சியாளர்களை நீதிமன்றம் குற்றம் சாட்டுகிறது.

கொசுக்களை ஒழிக்க ஒரு முழுமையான செயல்திட்டம் நம் அரசிடம் இல்லை. செயல்திட்டம் என்றால் புரியவில்லை என்று கூட தற்போதைய மத்திய அரசு கூறலாம். அரசுக்குப் புரியும் மொழியில் கூற நாம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

நமது நகரங்களிலும் மாநகரங்களிலும் சுற்றுப்புறத் தூய்மை என்பது மிகப் பெரிய பிரச்சனை. எங்கு பார்த்தாலும் திறந்த சாக்கடைகள், சாக்கடைக் குழிகள், குட்டைகள். இந்த மாதிரி சூழலில், கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசுவலைகள், கொசு விரட்டிகளைத் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்துவது அனைவருக்குமான தீர்வு அல்ல. ஏழை எளிய மக்கள் பெருமளவில் இடநெருக்கடியைச் சமாளித்து எப்படியோ வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இதெல்லாம் அவர்களைக் காப்பாற்றப் போகும் தீர்வுகள் அல்ல. மக்கள் வசிக்கும் இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி கொசுக்களை ஒழிப்பதுதான் ஒரே வழி. அதற்கு சுத்தமான சுற்றுப்புறச் சூழலை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்கள் பெருகாமல் செய்ய முடியும். கொசுக்கள் தங்குமிடங்கள், இனப்பெருக்க முறை, மக்களை அவை தாக்கும் நேரங்கள் பற்றி ஆய்வு செய்யத் தேவையான பூச்சியியல் நிபுணர்கள் நம்மிடம் இல்லை. பூச்சியியல் ஆய்வுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான மனித சக்திக்கான நிதி ஒதுக்கீடுகளும் முக்கியம். ஆனால் இந்தத் துறைக்கு முன்னுரிமை அளிக்க நம் அரசு தயாராக இல்லை. பட்ஜெட்டில் தேசிய நகர சுகாதாரத் துறைக்கு 2016-17 ல் 950 கோடி ரூபாயை ஒதுக்கிய அரசு 2017-18 ல் அதை 752 கோடியாகக் குறைத்துவிட்டது. ஸ்வச் பாரத் திட்டத்திற்கு விளம்பரமாக கைகளில் நீள்துடைப்பம் ஏந்தி குனியும் சிரமத்தைக்கூட எடுத்துக் கொள்ளாமல் குப்பைகளைக் கூட்டுவதுபோல பிரதமரும் ஆளுநர்களும் காமெராவுக்கு போஸ் கொடுப்பதில்தான் முனைப்பாக இருக்கிறார்களே தவிர, போதுமான நிதியை சுகாதாரத் திட்டங்களுக்கு ஒதுக்கி மக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையை ஆட்சியாளர்களிடம் காண முடியவில்லை.

நெருக்கடியை அரசுக்குத் தர மக்களால்தான் முடியும். சுத்தம், சுகாதாரம் பற்றி ஆவேச உரை நிகழ்த்துவதால் மட்டும் எந்தப் பலனும் இல்லை என்பதை பிரதமருக்கு மக்கள் உணர்த்த வேண்டும். 2027-க்குள் மலேரியாவையும் கொசுக்களால் பரவும் நோய்களையும் ஒழிப்பது என்ற இலக்கை அறிவித்துள்ள அரசு அதை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிடில், கொசுக் கடியிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.(உதவிய கட்டுரை : 2018 பிப்ரவரி 04 பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் திரு. ஆர்.அருண்குமார் எழுதியது)

Leave a Reply

You must be logged in to post a comment.