புதுதில்லி:
ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு, செல்போன் சேவை உள்ளிட்டவற்றுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை, காலவரையின்றி நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசின் சேவைகளுக்கும், சலுகைகளுக்கும் ஆதாரைக் கட்டாயமாக்கும் சட்டத்துக்கு எதிராக பலர் தொடர்ந்த வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் ஆதார் இணைப்புக்கான அவகாசம் முடிய இருந்த நிலையில், இந்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க தயார் என கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்கு மீண்டும் செவ்வாயன்று 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆதார் இணைப்பை ரயில்வே தட்கல் பயணச்சீட்டு வாங்குவதற்குக் கூட மத்திய அரசு கட்டாயம் என நிர்ப்பந்திக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு, செல்போன் சேவை போன்றவற்றுடன் இணைப்பதற்கான கெடுவை காலவரையின்றி நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: