திருப்பூர். மார்ச் 13-
கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தோர் போல் நடந்து கொள்ளும் குழாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் முதலாவது மண்டல் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயளாளர் காளிதாஸ் தலைமையில் அப்பகுதிமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 10 வது வார்டுக்கு உட்பட்ட பத்மாவதிபுரம் பகுதியில் குழாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மஷாருதீன். இவர் வரி வசூல் செய்யும் முறையானது மக்களை அவமானபடுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது. குறிப்பாக, மக்கள் பணியாளர் என்ற எண்ணம் இல்லாமல் வரி வசூல் செய்யும்போது பொதுமக்களிடம் மிகவும் தரக்குறைவாக கந்துவட்டி வசூல் செய்யும் நபர் போல் நடந்து கொள்கிறார். இதுமட்டுமின்றி வரிவசூல் என்கிற பெயரில் வீடுகளில் புகுந்து மிரட்டுவது, வேலைக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்களை நேரில் வரவழைத்து வரி ரசீதை கட்ட செல்வது போன்ற செயல்களும் ஈடுபடுகிறார்.

மேலும், வரி கட்டியவர்களின் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிப்பதற்காக குழி தோண்டுவதும், அந்த வீட்டின் உரிமையாளர் வரி ரசீதை காட்டியதும் மாற்றி தோண்டிவிட்டதாக அலட்சியமாக பதிலளித்து செல்கிறார். எனவே, இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.