லக்னோ:
மகாராஷ்டிரத்தை தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெரும் கிளர்ச்சி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மார்ச் 15ஆம் தேதி லக்னோ நோக்கி விவசாயிகள் அணிவகுக்க உள்ளனர். “சலோ லக்னோ” என்கிற பெயரில் நடைபெறவிருக்கும் இந்த அணிவகுப்புக்கான தயாரிப்புகளில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மார்ச் 15ல் லக்னோவில் நடைபெறும் பேரணியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
விவசாய விளைபொருளுக்கு உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு விலை வழங்க வேண்டும், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யவேண்டும், மின்கட்டண உயர்வு மற்றும் மின்துறையில் தனியார் நிறுவனங்களின் தலையீடு கூடாது, மாடுகளை விற்கவும், வாங்கவும் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அனைத்தையும் விலக்க வேண்டும், 60 வயதைக்கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும், ஊழலையும் விலைவாசி உயர்வையும் தடுக்க வேண்டும், வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநில விவசாயிகள் நடத்திய நெடும்பயணத்தின் வெற்றி வரலாறு படைத்துள்ளது. அந்த வெற்றி அளித்திருக்கும் உற்சாகத்தோடு உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் விவசாயிகள் ‘சலோ லக்னோ’ வுக்கு தயாராகி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: