மும்பை:
‘தற்கொலை அல்ல, போராட்டமே தீர்வு’ என பிரகடனப்படுத்தி மகாராஷ்டிர விவசாயிகள் மேற்கொண்ட 200 கிலோமீட்டர் நெடும்பயணம் திங்களன்று மும்பையில் அம்மாநில சட்டமன்ற வளாகத்தை முற்றுகையிடும் போராட்டமாக பேரெழுச்சியோடு நடைபெற்றது.திங்களன்று அதிகாலை லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மும்பை ஆசாத் மைதானத்திற்குள் மடைதிறந்த வெள்ளம்போல் நுழைந்தனர். போராட்டத்திற்கு மும்பை மக்கள் அளித்த வரலாறு காணாத ஆதரவைத் தொடர்ந்து மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கு வியர்க்கத் தொடங்கியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்து அசைவற்றுக் கிடந்ததை இந்தப் போராட்டத்தின் மூலம் உணரவேண்டியதாயிற்று. இப்போது கோரிக்கைகள் குறித்து விவாதிக்கலாம் என அரசு திங்களன்று பகலில் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் சங்க அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே தலைமையிலான பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் பேச்சு நடத்தி, விவசாயிகளின் 9 கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தார்.

ஆறு நாட்களுக்கு முன்பு (மார்ச் 6) நாசிக்கிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் துவங்கிய விவசாயிகளின் நடைபயணம் ஒரு லட்சம் போராட்டக்காரர்களுடன் ஞாயிறன்று மும்பையை வந்தடைந்தது. தானே-மும்பை எல்லையான முளுண்டில் மகாநகரம் விவசாயிகளின் நெடும்பயணத்திற்கு வரவேற்பளித்தது. விக்றோளியிலும் ஆவேசமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ஞாயிறன்று இரவு ஸயோனில் உள்ள கே.ஜே.சோமய்யா திடலை விவசாயிகள் வந்தடைந்தனர். திங்களன்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடப்பதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக இரவு முழுவதும் நடந்து, அதிகாலையிலேயே ஆசாத் மைதானத்துக்கு நெடும்பயணம் வந்தடைந்தது. இங்கிருந்து சட்டமன்ற கட்டடத்திற்கு 2 கிலோமீட்டர் தூரம் மட்டுமே. இந்நிலையில் தான் அரசுத் தரப்பில் விவசாயிகளை சந்திக்கவும், கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது. பேச்சுவார்த்தை நிறைவுபெறும் வரை ஆசாத் மைதானத்தில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தார்கள். பிற்பகல் 2 மணிக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சீத்தாராம் யெச்சூரி
பல்வேறு தலித் அமைப்புகள் விவசாயிகளின் நெடும்பயணத்திற்கு ஆதரவளித்து களமிறங்கின. சட்டமன்றத்தை முற்றுகையிடும் விவசாயிகளுடன் தலித் அமைப்புகளும் கரம்கோர்த்துள்ளது பொருளாதார நகரான மும்பை, மகத்தான மக்கள் திரளுக்கு வரலாற்று சாட்சியமாக மாறியது. போராட்டக்காரர்களை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். முன்னதாக, ஒரு லட்சம் பேர் அணிதிரண்டுள்ள இப்போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என அகில இந்திய விவசாயிகள் சங்க அசோக் தாவ்லே அறிவித்தார். முடிவு செய்த அடிப்படையில் முற்றுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மும்பை நெருங்க நெருங்க நெடும்பயணத்திற்கு மக்கள் ஆதரவு பெருகியது. தலித், முஸ்லீம், சீக்கிய அமைப்பினர் போராட்டக்காரர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிய வண்ணம் இருந்தனர். அதுபோல் குருத்வாராக்களிலிருந்தும், மசூதிகளிலிருந்தும் உணவு வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது. ஐஐடி, டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆப் சோசியல் சயன்ஸ் போன்ற பிரபல கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் போராட்டக்களத்தில் இணைந்தனர்.

2017இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய போரட்டத்தைத் தொடர்ந்து முதலமைச்சருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்தாததே, விவசாயிகளை இந்த போராட்டத்திற்குத் தள்ளியது. 2017 ஜுன் மாதத்திற்கு பிறகு இதுவரை 1700க்கும் மேற்பட்ட விவசாயிகள் விதர்பா பகுதியிலும் நாசிக்கிலும் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு எதிராக தற்போது செங்கொடியைக் கையில் ஏந்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் மட்டுமே இந்தப் போராட்டத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. போராட்டத்திற்கு பொதுமக்களின் பலத்த ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.ஞாயிறன்று மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித்துறை அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன் செய்தியாளர்கள் சந்திப்பையும் கூட்டாக நடத்தினார். என்சிபி, மகாராஷ்டிரா நவநிர்மாண்சேனா ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். நீர்பாசனத்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான கிரீஷ் மகாஜன், விக்றோளிக்கு வந்து அசோக் தாவ்லே, விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் அஜித் தாவ்லே, சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஜே.பி.காவித் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராகுல்காந்தி
இதனிடையே, விவசாயிகளின் நெடும்பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் இது மகாராஷ்டிர விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் பிரச்சனை எனக் குறிப்பிட்டுள்ளார்.விவசாயிகளின் போராட்டம் பாஜக அரசை வீழ்த்தும் என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா தெரிவித்துள்ளது. விவசாயிகளின் பிரச்சனைகளை ஏற்கும் வரை சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் சிவசேனா அறிவித்தது. நெடும்பயணத்தைத் தொடர்ந்து மாநில அரசு ஆடடம் கண்டு வருவதையே சிவசேனாவின் அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.

Leave A Reply

%d bloggers like this: