கோவை, மார்ச் 12-
கெயில் எரிவாயு திட்டக் குழாய்களை விளை நிலங்களில் பதிக்காமல், நெடுஞ்சாலை ஓரமாக அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் கெயில் நிறுவனம் சார்பில் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு வரை எரிவாயுக் குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், கெயில் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் என்று சில நாட்களுக்கு மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் கெயில் எரிவாயுக் குழாய் மாதிரியை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமை வகித்தார். இப்போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்:
மத்திய, மாநில அரசு பணிகளில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சதவிகித வேலைவாய்ப்பினை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் சங்கத்தின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப்பள்ளியை மேம்படுத்திடுக:
இதேபோல், வெள்ளளூர் அரசுப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வீரமணி உள்ளிட்டோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளளூர் அரசுப்பள்ளிக்கு சுகாதார பணியாளர்கள் மற்றும் இரவு நேரபாதுகாவலரை நியமிக்க வேண்டும். பழுதடைந்துள்ள கழிப்பிடங்களை சீரமைக்க வேண்டும். எதிர்கால திட்டத்தோடு வகுப்பறைகளை அதிகப்படுத்த வேண்டும். பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்ததுமேலும், இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவமும் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.