நாடு முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தவிர்க்க முடியாத செய்தியாக மாறிவிட்டது மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம். மும்பையில் உள்ள மந்திராலயம் எனப்படும் சட்டமன்றம் நோக்கிச் சென்ற அந்தப்பேரணி இந்திய விவசாயிகளின் போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்டது. அநேகமாக சுதந்திரத்திற்குப் பின் சுமார் 30ஆயிரம் விவசாயிகள் இடைவிடாது 6 நாள் நடத்திய பேரணி இதுவாகத்தான் இருக்கும். விவசாயிகள் தற்கொலைக்கு பெயர்போன மாநிலம் மகாராஷ்டிரா என்பதை நாடே அறிந்ததுதான்.

200 கிலோமீட்டர் பயணித்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தலைநகர் மும்பைக்குள் ஞாயிறன்று நுழைந்தனர். அவர்களுக்கு மும்பை நகர மக்கள் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்து உற்சாக மாக வரவேற்றனர்.மும்பையிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆனந்த் நகரிலிருந்து ஞாயிறன்று ஆறாவது நாள் பயணத்தை விவசாயிகள் துவங்கியபோது பலரது காலணிகள் ஏற்கனவே அறுந்துவிட்ட நிலையில் வெறும் காலில் நடந்தனர். சுட்டெரிக்கும் வெயிலால் காலில் வெடிப்புகள் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. ஆனாலும் தளராத உறுதியோடு நெடும்பயணத்தில் முழக்கமிட்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட 4 லட்சம் விவசாயிகளில் மகாராஷ்டிராவில் மட்டும் 76 ஆயிரம் விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன. மோடி அரசு தீவிரமாக அமல்படுத்திவரும் நவீன தாராளமய கொள்கைகளால் விவசாயிகள் மேலும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு நடத்திய 11 நாள் பல்வேறு விவசாய அமைப்புகள் கூட்டாக போராட்டம் நடத்தின. அப்போது மாநில பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்துடன் கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு நியாய மான விலை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி நெடும்பயணம் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் விவசாயிகளின் போராட்டம் இணையதளத்தில் #KisanLongMarch ஹாஸ் டேக் மூலம் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் இணையத்தில் டாப் டிரெண்ட் ஆக ‘விவசாயிகள் ஊர்வலம்’ மாறியுள்ளது.

ஒரே நாளில் 60 ஆயிரம் டுவீட்டுகள். அடுத்த 28 மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டுவீட்டுகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply