கோவை, மார்ச் 12-
கோவையில் மினி பேருந்துகள் அனுமதித்த வழித்தடத்தில் இயக்கமால் வேறு வழித்தடத்தில் இயக்குவதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக, அனைத்து ஆட்டோ சங்க கூட்டுக் கமிட்டியின் தலைவரும், சிஐடியு ஆட்டோ சங்க பொதுச்செயலாளருமான பி.கே.சுகுமாறன், மாவட்ட தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் கரும்பத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், கரும்பத்தம்பட்டி பகுதியில் உள்ள கிராமங்களை இணைக்கும் வாகாரம்பாளையம், செல்லாம்பாளையம், கனியூர், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. இந்த வழித்தடத்தில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட மினி பேருந்துகள் அப்பகுதிகளில் செல்லாமல் கரும்பத்தம்பட்டி, சோமனூர் ஆகிய பகுதிகளுக்குள் மட்டுமே சென்று திரும்புகின்றனர். இதனால் கிராமப்பகுதியில் உள்ள மக்கள் பாதிப்படைவதோடு, பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு அனுமதியற்ற வழித்தடத்தில் இயங்கும் மினி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.