மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் கிளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையின் இதயப்பகுதி செங்கடலாக மாறியிருக்கிறது. நாசிக் பகுதியில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் நடந்தே பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கைகளில் செங்கொடியுடன் மும்பையில் குவிந்திருக்கின்றனர். இவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு மாறாக போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தும் வேலையில் பாஜக முதல்வர் மற்றும் எம்பிகள் இறங்கியிருக்கின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.
மும்பையில் குழுமியிருக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் வந்திருக்கும் விவசாயிகள் தாங்கள் இனியும் ஏமாறப்போவதில்லை, ஏற்கனவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினால்தான் இங்கிருந்து நகர்வோம் என திரண்டிருக்கின்றனர். இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும என  மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். அதோடு வந்திருப்பவர்கள் விவசாயிகள் அல்ல இவர்கள் அனைவரும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என விவசாயிகள் பிரச்சனையை மடைமாற்றம் செய்ய முயன்றிருக்கிறார். காரணம்  மகாராஷ்டிரா மாநிலத்தின ஏனைய பகுதியில் இருக்கும்  விவசாயிகளும் திரண்டால் ஆட்சி அதிகாரம் அதோகதி ஆகிவிடும் என்ற பதட்டம்தான் முதல்வரின் பேச்சில் அதிகமாக இருக்கிறது.
இதே போல்  பாஜக எம்பி பூணம் மகாஜன் போராடுபவர்கள் மாவோயிஸ்ட்கள் என கூறி விவசாயிகளை கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவின் அவதூறு பிரச்சாரங்களை புறந்தள்ளி மும்பை வாழ் மக்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு தங்களின் மனப்பூர்வ ஆதரவை அளித்து வருகின்றனர். இதில் சீக்கியர்கள், இஸ்லாமியர்கள், மும்பை வாழ்தமிழர்கள் என பல்வேறு தரப்பினரும் திரண்டிருக்கும் விவசாயிகளுக்கு உணவு, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மும்பை ஐஐடியில் படிக்கும் ஆய்வுதுறை மாணவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.