மும்பை,
விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாசிக்கில் இருந்து புறப்பட்ட பிரம்மாண்ட விவசாய பேரணி நேற்று மும்பை வந்தடைந்தது. இன்று 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டப்பேரவையை முற்றுகையிட உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலாக தேவேந்திர பட்னாவிஸ் அரசு கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், விவசாயிகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றபடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் நாசிக்கில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பிரம்மாண்ட பேரணி தொடங்கினர்.
இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணமாக மும்பை புறப்பட்டனர். வழியில் திறந்தவெளியில் படுத்து உறங்கினர். சூரிய உதயத்துக்கு முன்னர் மீண்டும் மும்பை நோக்கி நடக்க தொடங்கினர். இந்தப் பேரணிக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஏற்பாடு  செய்திருந்தது. இதில் பழங்குடியினத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.
சுமார் 60000 விவசாயிகள் பங்கேற்பு
நாசிக்கில் இருந்து கடந்த 5 நாட்களாக சுமார் 180 கி.மீ. நடை பயணம் செய்து நேற்று பிற்பகல் விவசாயிகள் மும்பை வந்தடைந்தனர். அவர்கள் கேஜே சோமையா மைதானத்தில் குவிந்துள்ளனர். இன்னும் ஏராளமான விவசாயிகள் மும்பை நோக்கி தொடர்ந்து வண்ணம் உள்ளனர். இதனால் விவசாயிகளின் எண்ணிக்கை 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இன்று மும்பையில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.
குறிப்பாக ஆதிவாசிகளின் நிலங்களை விவசாயிகளுக்குத் தர வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் குறைகள் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து ஏஐகேஎஸ் அமைப்பின் தலைவர் அசோக் தாவ்லே கூறும்போது, ‘‘எங்கள் போராட்டத்தால் மும்பை நகரில் எந்தத் தொந்தரவும் ஏற்படாது. எங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிசிடம் பேசுவதாக அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறியுள்ளனர். எங்கள் போராட்டம் அமைதியான முறையில் நடக்கும். காலையில் 11 மணிக்கு மேல்தான் சட்டப்பேரவையை முற்றுகையிட செல்வோம். அதனால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாது’’ என்றார்.

Leave A Reply

%d bloggers like this: