தமிழகத்தில் அதிகரித்து வரும் காவல்துறையின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள்  (மார்ச் 10-11) மாநிலக் குழுக்கூட்டம் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் உள்பட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

காவிரி டெல்டா பிரதேசத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,40,000 சதுர கி.மீ. பரப்பளவில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை நிலம் மற்றும் கடல் பகுதிகள், காவிரி வடிநில பகுதியாக அறிவிக்கப்பட்டு, நிலத்தடி எரிபொருள் வள இருப்பு மண்டலமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் காலங்களில் இவற்றில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளிக்கப்படலாம். அதேபோன்று
தமிழ்நாட்டில் நிலப்பகுதி, கடல் பகுதிகளில் முதல்கட்டமாக 4,099 சதுர கி.மீ. பரப்பளவில் 24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் – தியாகவள்ளி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் – வைத்தீஸ்வரன் கோவில் வரையிலான 731 சதுர கி.மீ. நிலப்பகுதியில் 10 கிணறுகள், புதுச்சேரி அருகே மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீ. கடல் பகுதியில் 4 கிணறுகள், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தொடங்கி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைத் அடுத்த புஷ்பாவனம் வரை 2,574 சதுர கி.மீ. கடல் பகுதியில் 10 கிணறுகள் என மொத்தம் 24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல் வாயு ஆகியவற்றிற்கு தனித்தனி உரிமம் என்பதை மாற்றி ஒரு உரிமம் பெற்றால் எல்லாவித ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்க முடியும் என்ற வகையில் புதிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தனியார், உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்களும் இப்பணியினை செய்ய ஏலம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் காவிரி டெல்டா பகுதிகள் வறட்சி அடையும். கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் 64 திட்டங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளதில் 24 திட்டங்கள் தமிழகத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக
விளங்கக்கூடிய காவிரி டெல்டா பிரதேசத்தை பாலைவனமாக்கிவிடும். எனவே, மத்திய அரசின் இத்திட்டத்திற்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து கைவிட செய்ய வேண்டும். விவசாயிகள் – மீனவர்களின் வாழ்வை பாதிக்கும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திகிறது.

காவிரி பாசனப்பகுதியை பாலைவனமாக்கும் இந்த ஆபத்தான திட்டத்தை எதிர்த்து அனைத்து பகுதி மக்களும் போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டிக் கொள்கிறது.

மாணவிகள் படுகொலைகள் மற்றும் மாணவிகள் மீதான தாக்குதல்களை தடுக்க கோரும் தீர்மானம்

நாடு முழுவதும் உலகப் பெண்கள் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றும் வரும் சூழலில் சென்னை மீனாட்சி பொறியியல் கல்லுhரியில் மாணவி ஆயிஷா கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. காதலித்து ஏமாற்றியதால் படுகொலை, காதலிக்க மறுத்ததால் படுகொலை என்பது தொடர் கதையாக நடந்து வருகிறது.
காதலிப்பதற்கும், காதலிக்க மறுப்பதற்கும், யாரை வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது என்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பட்டப்பகலில் கல்லுhரி வளாகத்திற்கு உள்ளேயே நுழைந்து கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். சமீப காலமாக தமிழகம் முழுவதும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள், பாலியல் சீண்டல்கள் போன்றவைகள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சிவகங்கை மாவட்டம் செல்லியம்பட்டி உயர்நிலைப்பள்ளியில் பல மாணவிகள் அப்பள்ளி தலைமை ஆசிரியரால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சித்ராதேவி என்ற மாணவி காதலிக்க
மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு கொடூரமான கொலை நடைபெற்றுள்ளது. பல பள்ளி, கல்லுhரி விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வருவதும் அதிகரித்து வருகிறது. பல மாணவிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதும் மர்மமான மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. பல வழக்குகளில் பாதிக்கப்படும் மாணவிகள் புகார்கள் கொடுத்தாலும் உரிய நேரத்தில் போதிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியப்படுத்துவதாலும் இதுபோன்ற வன்முறைகள் அதிகரிக்கின்றன. உரிய நேரத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர் இளம் பருவத்தினர் மத்தியில் எற்படும் மனநிலை மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சிகளை கொடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுவெளியில் (இரயில் நிலையம், பேருந்து நிலையம்) போன்றவைகளில் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவது இன்றைய தேவையாகும். மாநில அரசு, காவல்துறையும், கல்வித்துறையும் கூடுதல் பொறுப்பெடுத்து குற்றங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் காவல்துறை தாக்குதலைக் கண்டித்து

கடந்த சில மாதங்களாக தமிழகக் காவல்துறை, பொது மக்கள் மீதும், போராட்டங்கள் நடத்துகிற மக்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குவது, பொய் வழக்கு போடுவது அதிரிகரித்து வருகிறது. பேருந்துக் கட்டண உயர்வு, நீட் தேர்வு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களை நடத்திய மாணவர் – இளைஞர் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்தது என்பதை தமிழக அரசு
மறுக்க முடியாது. பெண்களும், குழந்தைகளும் காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளானது உண்மை. காவல்துறையினரே வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதும் மக்கள் கண்ட உண்மை. மார்க்சிஸ்ட் கட்சியினரும் காவல் துறையின் இத்தகைய அடாவடித் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதுகுறித்து தமிழக டிஜிபியிடம் மார்க்சிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. ஆனாலும், ஜனநாயகத்தையும், போராடும் உரிமையையும்
பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இரண்டு தினங்களுக்கு முன், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், கர்ப்பிணிப் பெண் உஷாவை உதைத்துத் தள்ளி கொலை செய்தது, மனிதத்தன்மையற்ற கொடுமை ஆகும்.

மேற்குறிப்பிட்ட வகையில் ஜனநாயக, சமூக, மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்படும் காவல்துறையை ஒழுங்குபடுத்தவும், மேற்படி உரிமைகளை அரசியல் சட்ட உரிமைகள் என்ற முறையில் பாதுகாக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். அதேநேரம் மேற்படி உரிமைகளை பாதுகாக்கிற வகையிலும், காவல்துறையின் அராஜகத்தை தடுத்து
நிறுத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தீவிர போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.