செங்கொடி ஏந்தி விவசாயிகள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையை அதிரச்செய்திருக்கிறது. வேறுவழியின்றி பாஜக தலைமையிலான அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என எழுத்துபூர்வமாக உறுதியளித்திருக்கிறது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பாஜக  விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிப்போம். விவசாயிகள் தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதன் பின்னர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. ஆனால் அளித்த வாக்குறுதியின் படி விவசாயிகளின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். வேலை நிறுத்ததிலும் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய அரசு கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தது. ஆனால் அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. வழக்கம் போல் இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றி விடலாம் என பாஜக அரசு மெத்தனமாக இருந்து வந்தது.

இந்நிலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் திரண்ட விவசாயிகள் இனி கோரிக்கை நிறைவேறாமல் போராட்டத்தை கைவிடுவதில்லை. இது வாழ்வா சாவா போராட்டம் என்ற முடிவுக்கு வந்தனர். அதன் அடிப்படையில் செங்கொடிகளோடும், தலையில் சிவப்பு தொப்பிகளுடனும் திரண்ட விவசாயிகள் புனே மாவட்டம் நாசிக்கில் இருந்து வீரம்செறிந்த  போராட்டத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்தனர். பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கொடிகளோடு தங்களையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர். நாசிக்கில் துவங்கிய பேரணியின் முடிவில் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம், கோரிக்கையை மீட்டெடுப்போம் என்ற முழக்கத்தோடு புறப்பட்டது.

வழியெங்கும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பு மக்களும் ஆதரவளித்தனர். தங்களால் முடிந்த உணவு, தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை விவசாயிகளுக்கு செய்து தங்களின் நல்லாதரவையும் நல்கினர். அதோடு அப்பகுதிகளில் இருக்கும் விவசாயிகளும் செங்கொடியேந்தி தங்களையும் போராட்டக்களத்தில் இணைத்துக் கொண்டனர். 30 ஆயிரம் பேருடன் துவங்கிய போராட்டம் 180 கி.மீட்டர் கடந்து மும்பையை அடைந்த போது 60 ஆயிரமாக உயர்ந்தது. விவசாயிகளின் போராட்டத்திற்கு மும்பை வாழ் பொதுமக்களும், மும்பை ஐஐடி ஆய்வு மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தந்தனர்.
180 கி.மீட்டர் 50 ஆயிரம் பேர் நடைபயணமாக வந்த போதும், எந்த இடத்திலும் ஒரு சிறு அசம்பாவிதமும் இல்லை. கட்டுக்கோப்போடு, யாருக்கும் எவ்வித இடையூறும் இன்றி அமைதியான வழியில் அதே நேரத்தில் விடாப்பிடியாக வீரம் செறிந்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஞாயிறன்று மும்பை வந்தடைந்த செங்கொடி பேரணியால் மும்பையே சிவந்தது. மும்பையின் இதயப்பகுதி செங்கடலால் மிதந்தது. இந்நிலையில் திங்களன்று காலை சட்டமன்றத்தை முற்றுகையிடுவது என்பதில் விவசாயிகள் உறுதிகாட்டினர். இதற்கிடையில் அரசு தரப்பில் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது முதல்வர் எழுத்து பூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அல்லது திட்டமிட்டபடி சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் அறிவித்தனர்.
அதே போல் திங்களன்று காலை மாணவர்களுக்கு தேர்வு என்பதால் அவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் காலை 11 மணிக்கு மேல் மும்பை ஆசாத் மைதானத்தில் இருந்து சட்டமன்ற வளாகத்தை நோக்கி சென்று முற்றுகையிடுவது என முடிவு செய்து அறிவித்தனர்.

பத்திரிகையாளர் சாய்நாத் 
இதற்கிடையே விவசாயிகளின் அவலங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் போராளியாகவும், புகழ்பெற்ற பத்திரிகையாளராகவும் விளங்கும் சாய் நாத், மும்பை ஆசாத் மைதானத்திற்கு வந்து விவசாயிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். அதேபோல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர்  அஜித்நாவ்லே ஆகியோரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்..

சீத்தாரம் யெச்சூரி
போராடும் விவசாயிகளை  மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாரம்யெச்சூரி நேரில் சந்தித்து பிரமாண்ட கூட்டத்தில் போராட்டத்தை வாழ்த்தியும், கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் ஓயாது என முழக்கமிட்டார்.

பேச்சுவார்த்தை 
இதற்கிடையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச்செயலாளர் அஜித்நாவ்லே தலைமையில் 20 பேர் கொண்ட விவசாய பிரதிநிதிகள் முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விவசாயிகள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அப்போது விவசாயிகள் வழக்கம்போல் வாய் மொழி உத்திரவாதத்தை ஏற்க முடியாது. ஏற்கனவே இதுபோன்று விவசாயிகளுக்கு அளித்த எந்த உறுதிமொழியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. ஆகவே எழுத்துபூர்வமாக இந்த இந்த கோரிக்கைகளை ஏற்கிறோம் என கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

போராட்டம் வெற்றி 

நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் முதல்வர் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்தார். மேலும் 180 கி.மீட்டர் நடைபயணமாக வந்திருக்கும் விவசாயிகளை அவர் அவர் ஊருக்கு திரும்ப அரசு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விவசாயிகளின் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே போல் கொடுத்த உறுதி மொழிப்படி கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் இதைவிட  பன்மடங்கு விவசாயிகளோடு நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தனர்.

சிறப்பு பஸ், ரயில்
விவசாயிகள் சொந்த ஊர் திரும்ப இன்று இரவு இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அரசே அறிவித்தது. மேலும் ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே 15 பேருந்துகள் போராட்டக்களத்திற்கு வந்தன.
மகாராஷ்டிரா விவசாயிகள் செங்கொடி ஏந்தி வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை துவங்கி வைத்து இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கின்றனர். அதுவும் அளவு மாற்றம் குணமாற்றத்தை ஏற்படுத்தும் என்ற மார்க்சிய விஞ்ஞானத்தை மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கின்றனர். நம் விவசாயிகள்..

Leave a Reply

You must be logged in to post a comment.