=====சி.முருகேசன், ஜீன்பால்=====                                                                                                                                         ‘வானையளப்போம் கடல் மீனையளப்போம்’ என்று கூறிய மகாகவி பாரதி, ‘சந்தித் தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்’ என்றும் பிரகடனம் செய்தார். இப்போது கேரள இடதுமுன்னணி அரசு சாக்கடை சுத்தம் செய்யும் எந்திரத்தை தயாரித்து சரித்திர சாதனை படைத்துள்ளது.

சாக்கடை அடைப்புகளை அகற்றவும், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவும் சகதிக்குள் இறங்கி உயிர் துறந்தோர் ஏராளம். 2010 முதல் 2017 வரை மட்டும் இந்திய நாடு முழுவதும் 1470 பேர் இப்படி உயிரிழந்திருப்பதாக சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்கிற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலையும், உள்ளத்தையும் வருத்தி உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. அப்பட்டமான மனித உரிமை மீறலும், சட்டவிரோத நடவடிக்கைகளும் இதற்குள் புதைந்து கிடக்கின்றன. இதிலிருந்து விடுபட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு முன்மாதிரியை அண்மையில் கேரள அரசு ஏற்படுத்தியிருக்கிறது.சாக்கடைக்குள் இறங்கி மூச்சுத்திணறி இறந்த பச்சை உடம்புகளை வெளியே தூக்கிப்போடும் போது மனம் பதறும் அனைவருக்கும் எழும் கேள்வி. “இத்தனை பெரிய அறிவியல் வளர்ச்சியில் இதற்கு ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்க முடியாதா?” என்பதுதான். 2016இல் கேரள முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பினராயி விஜயனுக்கு ஏற்பட்ட அந்த கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. கேரள மாநில குடிநீர் பொறுப்புக் கழகத்தின் (கேரளா வாட்டர் அதாரிட்டி) நிர்வாக இயக்குநர் அது குறித்து விளக்கினார்.

ஒருநாள் முதல்வரிடமிருந்து வந்த தகவலில் அன்றைய நாளிதழில் வெளியான புகைப்படத்தை சுட்டிக்காட்டி, இதற்கு மாற்று வழி காணுமாறு கூறப்பட்டிருந்தது. முதல்வர் குறிப்பிட்டிருந்த புகைப்படம் திருவனந்தபுரம் நகரத்து தெருவில் உள்ள சாக்கடையில் நிரம்பி வழிந்த சாக்கடைக்குள் இறங்கிய ஒரு மனிதர் கழுத்து வரை மூழ்கிய நிலையில் காணப்பட்டார். நம்முடைய மேன்ஹோல்களில் அடைப்பு ஏற்பட்டால் இப்படித்தான் மனிதர்கள் இறங்கி அடைப்பை நீக்க வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற முதல்வரின் விருப்பத்தை கேரளா ஸ்டார்ட் அப் மிஷன் குழுவினரிடம் பகிர்ந்தபோதுதான் இளம்பொறியாளர்கள் சிலர் மேற்கொண்டு வரும் ரோபோட்டிக் முயற்சிகள் எங்கள் கவனத்திற்கு வந்தன. அந்த பொறியாளர்களிடம் பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தோம். அதன் விளைவுதான் பண்டிக்கூடு என்கிற பெருச்சாளி ரோபோவை கண்டுபிடிக்க தூண்டுதலாக அமைந்தது. கழுத்துவரை சாக்கடைக்குள் மூழ்கி நின்ற அதே தூய்மைப்பணியாளர் சதீசனின் கையால் அந்த ரோபோவை கடந்த 26.2.2018 அன்று முதல்வர் இயக்கச் செய்தார்.இதுபோன்ற 3 ஆயிரம் மேன்ஹோல்கள் எங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. குழாய்களில் ஏற்படும் கசிவு, கழிவுநீர் பாதைகளில் ஏற்படும் அடைப்புகளை சீரமைக்கும் சவாலான பணிக்கு இந்த ரோபோ பயன்படும். நமது பொறியாளர்களின் சொந்த தொழில்நுட்பத்தில் தயாரான இந்த ரோபோவை மார்ச் 2 ஆம் தேதி நடந்த ஆற்றுக்கால் பகவதி கோவில் பொங்கல் திருவிழாவின்போது பயன்படுத்தினோம். தூய்மைப் பணியாளர்களே கையாளும் வகையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக ரோபோவை தற்போது ஆய்வகத்திற்கு அதை வடிவமைத்த குழுவினர் கொண்டு சென்றிருப்பதாக கூறியதோடு பொறியாளர்களை தொடர்புகொள்ள செல்போன் எண்ணையும் அளித்தார் அந்த இளம் ஐஏஎஸ் அதிகாரியான ஷைனாமோள்.

திருவனந்தபுரம் டெக்னோபார்க்கில் உள்ள கேரளா ஸ்டார்ட் அப் மிஷன் ஆய்வகத்தில் பெருச்சாளி ரோபோவைப் படைத்த பொறியாள பிரம்மாக்களை சந்தித்தோம். இந்த குழுவில் எம்.கே.விமல் கோவிந்த், அருண் ஜார்ஜ், எம்.வி.நிகில், கே.ரஷித், வி.ஜலிஷ், அப்சல் முட்டிக்கல், இ.பி.ஸ்ரீஜித்பாபு, கே.சுஜித், வி.கே.விஷ்ணு ஆகிய 9பேர் உள்ளனர். 2016இல் மலப்புறம் எம்இஎஸ் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்த உடன் கைநிறைய சம்பளத்துடன் பிரபல நிறுவனங்களில் கிடைத்த வேலைகளை உதறிவிட்டு இந்த முயற்சியில் கரம் கோர்த்துள்ளனர். கடந்த 8 மாத காலமாக இரவு-பகல், ஊண்-உறக்கம் பார்க்காமல் உழைத்ததற்கு பலன் கிடைத்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் குழுவின் முயற்சிகளை கூறினார்கள் ரஷித்தும், அருண் ஜார்ஜும்.கல்லூரியில் படிக்கும்போதே (பி.டெக்) ரோபோ குறித்து ஆர்வம் ஏற்பட்டது.  நாங்கள் கிராமத்திலிருந்து வந்தவர்கள். பொருளாதார வசதி இல்லாததால் கிடைத்த வேலைகளில் சேர்ந்தோம். ஒரு ஆண்டுக்குள் வேலைகளை கைவிட்டு ஜென்ரோபோட்டிக் என்கிற நிறுவனத்தை தொடங்கினோம். ஐ.டி.செக்கரட்டரி சிவசங்கரன் எங்களுக்கு உதவினார். அப்போதுதான் கேரள வாட்டர் அதாரிட்டி எம்.டி. எங்களை தொடர்பு கொண்டார். சாக்கடை அடைப்புகளை அகற்ற உதவும் ஒரு இயந்திரத்தை வடிவமைக்க முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

கிராமங்களில் சாக்கடை அடைப்பும் மேன்ஹோலும் நாங்கள் அறியாதவை. அதன் பிறகு முழுமையாக அது குறித்து ஆய்வு செய்தோம். தமிழ்நாடு, கர்நாடகா, தில்லி உட்பட நாடு முழுவதும் மனித உயிர்களை பலிவாங்கும் சாக்கடைக்குழிகள் அதிர்ச்சி அளித்தன. அரசுகளே சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறுவதையெல்லாம் தெரிந்துகொண்டு இயந்திர தயாரிப்பில் எங்களை முழுமையாக ஈடுபடுத்தினோம். கேரளா ஸ்டார்ட் அப் மிஷன் மூலம் அரசின் உதவி கிடைத்ததால் இந்தப் பணியை விரைந்து முடித்தோம்.

ரோபோவின் சோதனை இயக்கத்தை ரீஜினல் கேன்சர் சொசைட்டியில் (ஆர்சிசி) நடத்தினோம். மனிதர்களால் இறங்க முடியாத மிகவும் ஆபத்தான அந்த பணியை வெற்றிகரமாக முடித்தது எங்களுக்கு உற்சாகமளித்தது.  துப்புரவு பணியை வாழ்வாதாரமாக கொண்டுள்ளவர்களுக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என்பதால் அவர்களே இயக்கும் வகையில் இதன் செயல்பாட்டை எளிமையானதாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேன்ஹோல் மூடிகளை அகற்றுவதும் மிக கடினமான பணி. அதற்கும் ஒரு இயந்திரத்தை வடிவமைத்து வருகிறோம். எங்களது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது. தில்லியில் மத்திய குடிநீர் வாரிய அமைச்சர் உமாபாரதியை சந்தித்து ரோபோ குறித்து விளக்கினோம். பிரதமர் அலுவலகத்திலிருந்து தூய்மை இந்தியா திட்டத்திற்காக அழைத்திருக்கிறார்கள். கனடா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் விசாரிப்புகள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.கழுத்துவரை சாக்கடைக்குள் மூழ்கிய புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த தூய்மைப் பணியாளர் சதீசன் (45) கூறுகையில், முதல்வர் மூலம் எங்களுக்கு இந்த தொழில் மீதிருந்த அவநம்பிக்கை விலகியிருக்கிறது. ரோபோவை நாங்களே இயக்க முடியும் என்பது எங்களை அடுத்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக செயல்படும் அரசு என்பதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்.

கேரளத்தின் மற்றுமோர் முன்மாதிரி

நானோ தொழில்நுட்பத்தில் தண்ணீர் உட்புகாத வகையில் இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. மின்னணு மற்றும் நிமோட்டிக் முறையில் செயல்படுகிறது. இதன் எடை 63 கிலோ. இதில் பொருத்தப்பட்டுள்ள 2 கேமராக்கள் சாக்கடை அடைப்பு உள்ள இடத்தை துல்லியமாக காட்டும். அதை வெளியில் உள்ள மானிட்டரில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப ரோபோவை நகர்த்த முடியும். அடைப்பை ஏற்படுத்தும் திடக்கழிவில் 10 மற்றும் 4 கிலோ எடைகளை கையாளும் 2 பக்கட்டுகள் ரோபோவிடம் உள்ளன. இந்த ரோபோவின் தற்போதைய விலை ரூ.10லட்சம் வரை ஆகும். அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

மனித உயிர்கள் பலியான பிறகு குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கும் அரசுகள், வருமுன் காக்கும் வகையில் இதுபோன்ற நவீன கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து விலைமதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும். இதிலும் கேரள அரசு முன்மாதிரியைப் படைத்திருக்கிறது.

 

Leave a Reply

You must be logged in to post a comment.