தேனி:
போடி அருகே வனப்பகுதியில் ஞாயிறன்று மலையேற்றப் பயிற்சியின் போது காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல் தேனியில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. படுகாயமடைந்த 17 பேருக்கு மதுரை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 27 பேர் சென்னை டிரக்கிங் கிளப் மூலமும், ஈரோடு மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த 12 பேர் உறவினர் மற்றும் நண்பர்களுடனும் தனித் தனி குழுவாக கடந்த மார்ச் 10ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். குரங்கணியில் இருந்து அன்று காலை அனைவரும் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். இதில், சென்னையில் இருந்து வந்திருந்த நங்கநல்லூரைச் சேர்ந்த சாரதா ஸ்ரீராம், வேளச்சேரியைச் சேர்ந்த ரேணு, புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரேகா ஆகிய மூவர் உடல் நிலை சரியில்லாததால் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்லாமல் சென்னைக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

குரங்கணியில் இருந்து கொழுக்குமலை வரை 15 கி.மீ.தூரம் வனப் பகுதிக்குள் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட இவர்கள் அனைவரும், இரவில் கொழுக்குமலையில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் ஏற்பாடு செய்திருந்த குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். பின்னர் ஞாயிறு காலை 36 பேரும் கொழுக்குமலையில் இருந்து திரும்பவும் குரங்கணி நோக்கி வனப் பகுதியில் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, பிற்பகல் சுமார் இரண்டு மணிக்கு ஒத்தை மரம் மலை முகடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு பின்புறம் கொழுக்குமலை வனப் பகுதியில் இருந்து காட்டுத் தீ பரவியுள்ளது.

காட்டுத் தீயின் தீவிரம் அதிகரித்த நிலையில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மலைச் சரிவு பள்ளங்களில் குதித்தும், பாறை இடுக்குகள் வழியாக புகுந்தும் தப்பி ஓடியுள்ளனர். சுழல் காற்று வீசியதால் வனப் பகுதியில் காட்டுத் தீ அனைத்து திசைகளிலும் சூழ்ந்து பரவியதாக கூறப்படுகிறது.மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கிய தகவலறிந்து குரங்கணி, கொட்டுகுடி மலைக்கிராம மக்கள், கொழுக்குமலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், வனத் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை கமாண்டோ பிரிவினர், வனப் பகுதிக்குள் சென்று காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், காட்டுத் தீயில் இருந்து தப்பி வந்த திருப்பூரைச் சேர்ந்த ராஜசேகர், சாதனா, பாவனா, ஈரோடு பகுதியைச் சேர்ந்த நேகா, பிரபு, சென்னையைச் சேர்ந்த சஹானா, நிவேதா, விஜயலட்சுமி, பூஜா, மோனிஷா ஆகிய 10 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இரவில் மீட்பு பணி

குரங்கணியில் இருந்து 5 கி.மீ.,தூரம் ஒத்தை மரம் வனப் பகுதி வரை நடந்து சென்று மீட்பு பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில், ஞாயிறு இரவு 9 மணிக்கு தேனி காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் உள்ள காவலர்கள் மீட்பு பணியில் களம் இறக்கப்பட்டனர். இதில், வனப் பகுதிக்குள் தீயில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில் 17 பேர் கிடப்பது கண்டறிப்பட்டது. காயமடைந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக “டோலி’ கட்டி சுமந்தவாறு மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து அவர்கள் தேனி, மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உடல்கள் மீட்பு
இந்த நிலையில், திங்களன்று காலை 2 ஹெலிகாப்டர் மூலம் வனப் பகுதியில் தண்ணீர் பீய்ச்சி காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சி செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் வனப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கண்டறிப்பட்டன. இந்த சடலங்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரேத பரிசோதனைக்குப் பின், இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.அமைச்சர்கள் முகாம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் போடி அரசு மருத்துவமனை, குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களுக்குச் சென்று மீட்பு பணி குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினர். குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு மற்றும் சிகிச்சைப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.