திருப்பூர், மார்ச் 12-
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே ஞாயிறன்று இரவு மூன்று இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி குமனன்தொழு பகுதியைச் சேர்ந்த சுதாகர் (வயது 24) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் தங்கபாண்டி (21) இருவரும் திண்டுக்கல்லில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்களதுஇருசக்கர வாகனம் தாராபுரம் சாலையில் இருந்து குண்டடம் வழியாக பல்லடம் நோக்கி வந்தபோது, எதிர்திசையில் கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தங்கபாண்டியன் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும், இவர்கள் மீது மோதியதுடன் நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.

இதில் அந்த வாகனத்தில் பயணம் தேனி கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 40), மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜேஸ்வரி (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதன்பின்னர், எதிர்திசையில் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதுடன், தாராபுரம் நோக்கி முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதிய பின்னர் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி கார் நின்றது. இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது.இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த பால்ராஜ் (32), காரில் அவருடன் வந்த சின்னவல்லகுண்டாபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (35) மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த குண்டடம் தாயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (50) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். இதில் கிருஷ்ணன் பல்லடம் தனியார் மருத்துவமனையிலும், பால்ராஜ், செந்தில்குமார் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து குறித்து குண்டடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: