திருப்பூர். மார்ச். 12-
திருப்பூர் 12-வது வார்டு பகுதி மக்கள் குடிநீர் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 12 ஆவது வார்டுக்குட்பட்ட சாமுண்டிபுரம் வடிவேல்நகர் 1 மற்றும் 2-வது வீதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு 3-வது குடிநீர் திட்டத்தின் கீழ் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 15 நாட்களாக அந்த பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், அந்த பகுதியில் உள்ள 3 ஆழ்குழாய் கிணறுகளும் பழுதடைந்து உள்ளது. இதனால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஞாயிறன்று சாமுண்டிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் மாநகராட்சி அதிகாரிளை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் சிறிது நேரத்திலேயே அப்பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: