காலுள்ளோர் நடக்கக்கடவர்
– ஆதவன் தீட்சண்யா

பூமியின் அங்குலந்தோறும்
உழைப்பால் செழிப்பித்து 
எமது ஒவ்வொரு பருக்கையினையும்
உழுவித்து ஈந்தவர்கள்
கருகி மடியும் கனவுகளை உயிர்ப்பிக்க
தமது நிலத்தைப் போலவே
வறண்டு வெடித்த பாதங்களோடு வருகிறார்கள்

உயிரான அவர்களது நிலத்தை விழுங்கி
உலகின் மறுகோடிக்கு நெளியும் இச்சாலைவிரியனை
கருப்புக்கம்பளமென விரித்துப் போட்டு
ஒவ்வோர் அடியையும் தீரத்தால் ஊன்றி
விரையும் அவர்தம் கால்களின் போக்கில்
கண்குவித்திருக்கிறது இவ்வுலகம்

தாளாமல் மாண்டவர்களின் துயராலும்
மாளாமல் வாழ்ந்துவிடும் துணிவாலும் வலுவேறி
வனத்தை நிலத்தை
விதையை வெள்ளாமையை மீட்டெடுக்க
ராப்பகலாய் நடந்து
கோட்டை புகும் அக்கால்களைப் பற்றியபடி
அவர்களோடே வரும் இக்கவிதை
அவர்களது வெறுங்காலுக்குச் செருப்பு
வெடித்தப் பாதங்களுக்கு களிம்பு
வீங்கிய காலுக்கு ஒத்தடத் தவிடு
அறுந்த செருப்புவாரை இழுத்துக்கோத்த ஊக்கு
அல்லது
அவர்களது ஆவேசத்தின் ரூபமான செங்கொடி

Aadhavan Dheetchanya

Leave A Reply

%d bloggers like this: