திருப்பூர், மார்ச் 12 –
திருப்பூரில் வளர்மதி கூட்டுறவு விற்பனை பண்டக சாலை கட்டிப்பாட்டில் உள்ள நியாயவிலை கடை (எண் 44)-இல் விற்பனையாளர் இல்லாததால் கடந்த சில தினங்களாக பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஓடக்காடு நியாயவிலைக் கடையின் விற்பனையாளராக இருப்பவர் வேலுச்சாமி. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதால் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டார். எனினும் இவருக்குப் பதிலியாக மாற்றுப் பணியாளரை நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் கடந்த சில தினங்களாக இந்த கடைக்கு வரும் பொதுமக்கள், விற்பனையாளர் இல்லாததால் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பிச் சென்று வருகின்றனர். கடையில் உதவியாளர் மட்டும் இருக்கும் நிலையில் எவ்வித பொருளும் விநியோகம் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.இதுதொடர்பாக வளர்மதி கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் சண்முகவேலை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஓடக்காடு கடைக்கு மாற்று ஆள் பணிக்கு அனுப்பப்படுவார். மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.