தஞ்சாவூர்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நூறுநாள் வேலை கேட்டு தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நூறுநாள் வேலை கேட்டு மனு கொடுத்து காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பு தஞ்சையில் திங்களன்று நடைபெற்றது. மாதர்சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாநிலத்தலைவர் வாலண்டினா, விவசாய சங்க மாநில துணைச்செயலாளர் சாமி.நடராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைச்செயலாளர்கள் கே.பக்கிரிசாமி, எஸ்.சங்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மாதர்சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி கூறுகையில், ” கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வறட்சி தாண்டவமாடியது. இவ்வாண்டும் காவிரி பிரச்சினை, பருவமழை பாதிப்பு என வறட்சி தொடர்கிறது. கிராமப்புற மக்களின் ஒரே வாய்ப்பான நூறுநாள் வேலைத்திட்டத்தையும் மத்திய – மாநில அரசுகள் முடக்குகின்றன. கடந்த 6 மாதமாக இரு அரசும் வேலைத்திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. தொழிலாளர் சங்கம் சார்பில் பல போராட்டங்களை நடத்தி உள்ளனர். சங்கத் தலைவர்கள் அதிகாரிகள், முதலமைச்சர் என பலரையும் சந்தித்தும் இதுவரை வேலை தர மறுக்கின்றனர்.

மத்திய அரசு ரூ 55 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. கடந்த ஆண்டு வேலைக்கான சம்பள பாக்கி மட்டும் ரூ 7 ஆயிரம் கோடி உள்ளது. அதுபோக மீதி உள்ள ரூ 48 ஆயிரம் கோடி போதுமானதல்ல. எனவே கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். ஊராட்சிகளில் நூறுநாள் வேலை முழுமையாக தரவில்லை. சட்டக்கூலி தரப்படுவதில்லை. மாநில அரசு, வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை தரவேண்டும். பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சட்டக்கூலியை குறைக்காமல் வழங்கவேண்டும். நிலுவையில் உள்ள கூலியை தாமதமின்றி வழங்க வேண்டும். கணினியில் பதிவு செய்கிறோம் என்ற பெயரில் வேலைக்கான கூலியை உடனடியாக வழங்கவேண்டும். இதனை வலியுறுத்தி. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், ஜனநாயக மாதர்சங்கம் சார்பில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மனுக் கொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்” என்றார்.

பேட்டியின்போது மாதர்சங்க தஞ்சை மாவட்டச்செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் என்.வி.கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் ஆர்.வாசு ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: