கோவை, மார்ச் 12-
சட்ட, சமூக பாதுகாப்பின்றி தூய்மைப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மைப்பணி தொழிலாளர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) தலைமையில் நூற்றுக்கும் அதிகமான சுகாதார தொழிலாளர்கள் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அமைப்புகளின் கீழ் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூய்மைப்பணி, குடிநீர் விநியோகம், சுகாதாரப்பணி, வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பணிகளில் இத்தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காலமுறை ஊதியம், ஒப்பந்த தொகுப்பூதியம் என்கிற அடிப்படையில் மூன்றாண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் இவர்களுக்கு அரசின் எவ்வித சட்ட, சமூக பாதுகாப்பும் இல்லாத நிலையில் குறைந்த ஊதியத்தை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் துப்பரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்கிற தொடர்ச்சியான போராட்டத்தையடுத்து தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு 2டி எண்.62ல் ஊதியத்தை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது. ஆனால், இந்த ஊதியத்தை இதுவரை எந்த உள்ளாட்சிஅமைப்புகளும் வழங்குவ’தில்லை. ஆகவே, உடனடியாக அரசு நிர்ணயித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. முன்னதாக, இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை பதாகைகள் கைகளில் ஏந்தியபடி ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, ஊரக வளர்ச்சி சங்கத்தின் பொருளாளர் கணேசன் மற்றும் ராஜாக்கனி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.

திருப்பூர்
இதேபோல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ் பழனிச்சாமியிடம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இம்மனுவில் கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அரசாணைபடி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு நான்கு மணி நேரத்திற்கு ரூ.206 வீதமும், துப்புரவு ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.355.16 வீதமும் ஊதியம் வழங்க வேண்டும். இந்த உத்தரவை கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கணக்கீடு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். முன்னதாக, இம்மனுவினை அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: