தியாகி இடுவாய் தோழர் கே.ரத்தினசாமியின் 16 ஆவது ஆண்டு நினைவு நாள் மார்ச் 13 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு இதே நாளில் தோழர் ரத்தினசாமியை கொடூரமான முறையில் படுகொலை செய்த ஆதிக்க சக்திகள் “இவர் செய்த தவறுகள்” என்று எட்டு காரணங்களை ஒரு பேப்பரில் எழுதி பாலித்தீன் பையில் போட்டு அவரின் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளைப் பாருங்கள்.

1. ஆக்கிரமிப்பை அகற்ற செய்த அராஜகம்: அரசின் புறம்போக்கு நிலத்தை ஆதிக்க சக்திகள் அனுபவித்து வந்தார்கள். 1996 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ரத்தினசாமி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்று பொறுப்பேற்றார். மாணவர்களின் கல்வி தேவைக்காக பள்ளிக்கூடம் கட்ட, ஆதிக்க சக்திகள் அனுபவித்து வந்த, அரசுக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அங்கு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. இதைத்தான் எதிரிகள் குற்றம் என குறிப்பிட்டுள்ளனர். ஒரு பிடி மண்ணைக்கூட ரத்தினசாமி தனக்காக எடுத்துச் சென்றார் என்று கொலைகாரர்களால்கூட எங்கள் தோழன் மீது குற்றம் சுமத்த முடியவில்லை!

2. தலித் மக்களுக்கு சப்போட் செய்தது: இடுவாய் கிராமத்தில் டீக்கடைகளில் இரட்டை கிளாஸ் முறை இருந்து வந்தது. இந்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக ரத்தினசாமி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி இரட்டை கிளாஸ் முறை அங்கு முடிவிற்கு வந்தது. இதை ஆதிக்க சக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீர் தனியார் கிணற்றை நம்பியோ, பொது குழாயில் மற்றவர்கள் தயவில் குடிநீர் பிடிக்கும் நிலையோ இருந்தது. ரத்தினசாமி தலைவராக ஆனபிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றவர்கள் தயவின்றி வாழ முடிந்தது. இதை ஆதிக்க சக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் தலித்துகளுக்கு சப்போட் செய்தது என்று கூறியுள்ளார்கள்.

3. அன்று சாகாமல் தப்பித்தது: 1996 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இடுவாய் ஊராட்சியில் போட்டியிட்டு தலைவராக ரத்தினசாமி பொறுப்பேற்று மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். இதனால் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும் மக்களின் செல்வாக்கும் அதிகரித்தது. ரத்தினசாமி தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போய்விடும் என்று பயந்த ஆதிக்க சக்திகள் ரத்தினசாமியை கொலை செய்ய முதல் முறையாகத் திட்டமிட்டனர்.

1998 இல் ஒரு நாள் இரவு ஊராட்சி அலுவலகத்தில் ரத்தினசாமி வேலையாக இருந்தபொழுது அவரைத் தாக்கி, இரண்டு கைகளையும் பின்புறமாகக் கட்டி, விஷத்தை வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்து, சோளக்காட்டில் போட்டுவிட்டு போய் விடுகின்றனர். காலையில் விவசாயத் தொழிலாளி ஒருவர் சோளக்காட்டிற்கு தண்ணீர் ​பாய்ச்சுவதற்குச் சென்ற பொழுது, மயங்கிய நிலையில் ரத்தினசாமி அங்கே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தகவல் சொன்னபின் உடனடியாக மீட்டு கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 40 நாட்கள் சிகிச்சைக்கு பின் உயிர் தப்பினார். அதனால்தான் “அன்று சாகாமல் தப்பித்தது” என்று எழுதினார்கள்.

4. கிறிஸ்துவர்களுக்கு சப்போட் செய்தது: இடுவாய் பகுதியில் கிறிஸ்துவ மக்கள் சர்ச்சுகளில் வழிபாடு செய்வதற்கு இடையூறு செய்த இந்து முன்னணிக்கு எதிராக நின்று கிறிஸ்துவ மக்களின் வழிபாட்டு உரிமைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால்தான் “கிறிஸ்துவர்களுக்கு சப்போட் செய்தது” என்று எழுதினார்கள்.

5. கவுண்டர்களை மதிக்காதது.

6. இந்துவுக்கு எதிராய் இருந்தது: மேலே சொன்ன தாழ்த்தப்பட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ததால் அம்மக்கள் ஆதிக்க சாதியைச் சேர்ந்த தனிநபர்களைச் சார்ந்து நிற்க வேண்டியதில்லை என்ற நிலைமை உருவானது. இதனால் கடந்த காலங்களைப் போல் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிக்க சக்திகள் அடிமையாக நடத்த முடியாமல் போனதும், டீ கடைகளில் இரட்டை கிளாஸ் முறை ஒழிக்கப்பட்டதும் ஆதிக்க சக்திகளின் ஆத்திரத்தை அதிகரித்தது. அத்துடன் கிறிஸ்துவ மக்களின் வழிபாட்டிற்கு உதவி செய்ததாலும் தான் 5, 6 ஆம் காரணங்கள் சொல்லப்பட்டது.

7. மீண்டும் ஜெயித்தது: 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தோழர் ரத்தினசாமி போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். இன்னும் ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தில் ரத்தினசாமி இருந்தால் உள்ளூர் ஆதிக்க சக்திகளை மக்கள் கால காலத்திற்கு மதிக்கமாட்டார்கள் என்ற கோபத்தில்தான் “மீண்டும் ஜெயித்தது” என்று எழுதி வைத்தனர்.

8. கம்யூனிஸ்ட்டாய் இருப்பது:   தோழர் ரத்தினசாமி கம்யூனிஸ்ட்டாக இருந்ததால்தான் அவரை, ஆதிக்க சக்திகள் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். அப்பொழுதும் கூட ரத்தினசாமி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்தார் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. இதற்கு காரணம் ரத்தினசாமி “கம்யூனிஸ்ட்டாய் இருந்ததுதான்” என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருப்பூரில் தொழிலாளர்கள் உரிமைக்காக தலைமை தாங்கிப் போராடிய ஆஷர் மில் பழனிச்சாமி படுகொலை செய்யப்பட்டார். திருப்பூர் மேற்கு பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் போராடியபொழுது தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட இளம் தோழர் சீராணம்பாளையம் பழனிச்சாமி படுகொலை செய்யப்பட்டார்.
பனியன் தொழிலாளர்களை சங்கரீதியாக திரட்டிய ஒரே காரணத்துக்காக, கம்பெனி நிர்வாகம் கூலிப்படையை ஏவி, தோழர் பன்னீர்செல்வம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்திய நாடு முழுவதும் மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக செயல்படும்பொழுது இவ்வாறான உயிர் இழப்புகள் வரும் என்று தெரிந்துதான் கம்யூனிஸ்ட்டுகள் செயல்படுகிறார்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்களை செய்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். சுதந்திர இந்தியாவில் மக்கள் நலனுக்காக எண்ணற்ற தியாகங்களை செய்து வருபவர்களும் கம்யூனிஸ்ட்டுகளே!

மக்கள் பிரதிநிதிகளாக அதிகாரத்தில் அமரக்கூடியவர்கள், கோடி கோடியாக கொள்ளையடிக்கக் கூடியவர்கள் உள்ள இந்த தேசத்தில்தான் இருபது வருடங்களாக திரிபுராவின் முதலமைச்சராக இருந்தும் தோழர் மாணிக் சர்க்கார் சொந்தவீடு இல்லாமல் கட்சி அலுவலகத்தில் குடியேறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட், ஜோதிபாசு, இ.கே.நாயனார், நிருபன் சக்கரவர்த்தி, புத்ததேவ் பட்டாச்சார்யா, தசரதேவ், அச்சுதானந்தன், மாணிக் சர்க்கார் மற்றும் தற்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் என ஒன்பது பேர் முதலமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்தனர். அத்தனை பேரும் மாசற்ற மாணிக்கங்களாக இருந்தனர் என்பதை நாடறியும்.

பினராயி விஜயன் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி அரசு அண்மையில் தலித் மக்களும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சகர் பணி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை உருவாக்கித் தந்தது. இப்போது சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளிகள் உயிரிழப்பதைத் தடுக்கும் ‘ரோபோ’ கருவியை தயாரித்து அவர்களை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளது. தலித் விடுதலைக்கும் சமூகநீதிக்கும் சமத்துவ நீதிக்கும் என்றும் துணை நிற்பது கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பு. எனவே, தலித் மக்களுக்கு ஆதரவாய் இருந்த தியாகி ரத்தினசாமியை படுகொலை செய்தவர்கள், இவர் செய்த தவறுகள் என்று கூறியுள்ள குற்றச்சாட்டுகளை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் உயிர் உள்ளவரை தொடர்ந்து செய்வோம் என சபதம் ஏற்கும் நாளாக மார்ச் 13 இல் இடுவாயில் சங்கமிப்போம்! சபதமேற்போம்!!

கே.காமராஜ் 
மாநிலக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)

Leave A Reply

%d bloggers like this: