நாடு முழுவதும் கடந்த வாரம் திரிபுரா தேர்தல் சூடான விவாதமாக இருந்தது. இந்த வாரம் நாடு முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தவிர்க்க முடியாத செய்தியாக மாறிவிட்டது மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம். மும்பையில் உள்ள மந்திராலயம் எனப்படும் சட்டமன்றம் நோக்கிச் சென்ற அந்தப்பேரணி இந்திய விவசாயிகளின் போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்டது.

அநேகமாக சுதந்திரத்திற்குப் பின் சுமார் 30 ஆயிரம் விவசாயிகள் இடைவிடாது 6 நாள் நடத்திய பேரணி இதுவாகத்தான் இருக்கும். விவசாயிகள் தற்கொலைக்கு பெயர்போன மாநிலம் மகாராஷ்டிரா என்பதை நாடே அறிந்ததுதான். அம்மாநிலத்தைக் கடந்த காலத்தில் ஆண்ட காங்கிரஸ் அரசாக இருந்தாலும், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-சிவசேனா அரசாக இருந்தாலும் விவசாயிகளை வஞ்சிப்பதில் ஒரேகொள்கையைக் கொண்டவர்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிகள் மாறினாலும் விவசாயிகளின் வாழ்வில் எந்தமாற்றமும் ஏற்படவில்லை.

பருத்தி, கரும்பு, ஆரெஞ்சு, திராட்சை, மாதுளம் என விவசாயத்திற்குப் பெயர்போன மாநிலம் அது. “ எங்களது வாழ்வில் மாற்றம் வராதா? தற்கொலை தான் ஒரே தீர்வா?’’ நித்தம் நித்தம் செத்துப்பிழைத்த அம்மாநில விவசாயிகள் விழித்துக்கொண்டார்கள். உலகிற்கே உணவு படைக்கும் நாம் ஏன் கையேந்தவேண்டும்? நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நமக்காக இல்லாமல் யாருக்காக இருக்கிறது? ஒரு கை பார்த்துவிடுவோம்’’ என்று கால் கடுக்க மும்பை நோக்கிக் கிளம்பினார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் விடுத்த அழைப்பை வெற்றிகரமாக்காமல் விடமாட்டோம் என்று புறப்பட்ட விவசாயிகள் தலைநகர் மும்பையை அடையும் முன்பு நாசிக்கில் இருந்து 170 கி.மீ நீண்ட பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தது. நாள்தோறும் சராசரியாக 35 கிலோ மீட்டர் நடந்தார்கள். ஏதோ அடையாளத்திற்காக 50, 60 விவசாயிகள் அல்ல. 30ஆயிரம் விவசாயிகள் நடந்தார்கள். செருப்பு அணியக்கூட வசதியில்லாத விவசாயிகள் அவர்கள்.

கைகளில் செங்கொடியையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏந்தி அணிவகுத்தார்கள். அவர்களின் நடைபயணத்தால் மும்பை- நாசிக் தேசிய நெடுஞ்சாலையே செங்கொடிகளால் போர்த்தியது போல் காட்சியளித்தது. இதனால் தான் தேசிய தொலைக்காட்சிகள் அனைத்தும் நாள்தோறும் நேரடியாக இந்தப்பேரணியைச் சிறிது நேரமாவது ஒளிபரப்பவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன.

இந்தப் பேரணி எதற்காக? மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் கோரிக்கைகள் தான் என்ன? ஏன் இந்த வேகாத வெயிலில் அவர்கள் நடந்து வரவேண்டும்? அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏஐகேஎஸ்) தலைமையில் இவர்கள் அணிதிரள என்ன காரணம்? ஒன்றும் இல்லை. தாங்கள் விளைவிக்கும் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலையை உத்தரவாதப்படுத்து என்கிறார்கள். வங்கிகள் மற்றும் கூட்டுறவு சொசைட்டிகளில் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி செய்க என்கிறார்கள். வன உரிமைச் சட்டத்தின்படி வனப்பகுதியில் காலம் காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றக்கூடாது, அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு அரசே விலையை நிர்ணயம் செய்யவேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யவேண்டும் ஆகியவற்றைத்தான் அவர்கள் கேட்கிறார்கள்.

மூங்கில் கம்பும் பிளாஸ்டிக் பையும்:
நடைபயணத்தில் கலந்துகொண்ட 30ஆயிரம் விவசாயிகளில் ஒருவர் சங்கர் வாங்ரே. இவர் நாசிக் மாவட்டம் டின்டோரி தாலுகாவில் உள்ள நாலேகான் கிராமத்தை சேர்ந்தவர். செருப்புக்கூட அணியமுடியாத நிலையில் உள்ள அவர் முதல் நாள் பேரணி துவங்கிய நாசிக்கில் உள்ள சிபிஎஸ் சதுக்கத்திற்கு தனது கிராமத்தில் இருந்து 28 கி.மீ தூரம் நடந்தே வந்து சேர்ந்தார். நாசிக்- அக்ரா நெடுஞ்சாலையில் இகாத்பூரி ராய்காட்நகர் பகுதியைப் பேரணி அடையும்போது அந்த 65வயது விவசாயி சற்று இளைப்பாறுகிறார். அவரது கையில் ஒரு பிளாஸ்டிக் பையும் மூங்கில் கம்பும் மட்டுமே உள்ளது. ஆனால் மனுஷன் நம்பிக்கையை இழக்கவில்லை. பேரணியின் இடையில் தலைவர்கள் உரையாற்றும் போது கண்களை மூடிக்கொண்டு அமர்ந்துகொள்கிறார். அந்தி சாயும் நேரம். இருட்டான இடத்தில் அவரைப்போல ஆயிரக்கணக்கான விவசாயிகளை அந்த இடத்தில் பார்க்கமுடிந்தது.

அடுத்தநாள் பேரணிக்குத் தயாராக உறங்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. சூரியன் உதயமாவதற்கு முன்பே அவர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்கிறார்கள். காலை உணவு, தேநீருக்காகக் காத்திருக்கவில்லை. வழியெங்கும் கிராம மக்களும் தொழிலாளர்களும் தரும் எளிமையான உணவுதான் அவர்களுக்கான உணவு. கிராம மக்களும் எந்த வித அரசியல் கட்சியையும் சாராத பொதுமக்களும் உலகிற்கே உணவு படைக்கும் இந்த விவசாயிகளுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்தார்கள். சிலர் சாப்பாடு செய்து தந்தார்கள். சிலர் மோர் போன்ற பானங்களைத் தந்து அவர்களின் களைப்பையும் பசியையும் போக்கினார்கள். மார்ச் 6ஆம் தேதி நாசிக் நகரில் இருந்து இந்தப் பேரணி தொடங்கியது.

வாட்டி எடுக்கும் வெயிலில் இவ்வளவு தூரம் கால் கடுக்க ஏன் நீங்கள் வரக்காரணம் என்ன என்று கேட்டபோது, நாங்கள் எங்களது உரிமைகளுக்காகப் போராடுகிறோம். மாநிலத்தில் உள்ள பாஜக – சிவசேனா அரசு எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அந்தக் கோரிக்கைகளை ஆட்சியாளர்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டவே இந்தப்பேரணி என்றார் விவசாயி சங்கர் வாங்ரே.

எங்களை ஏமாற்ற முடியாது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பான கிசான் சபா என்று அழைக்கப்படும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தான் இந்தப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. “ நாங்கள் இதைப் பேரணி என்று அழைக்கவில்லை. இது சட்டமன்றத்தை நோக்கிய நீண்டபயணம். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவேண்டும், வனப்பகுதியில் உள்ள விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும்,என்பதற்காக 2015 ஆம் ஆண்டு ஒரு போராட்டத்தை நடத்தினோம். அப்போது அரசு சில வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் நாட்கள் கடந்ததுதான் மிச்சம். வாக்குறுதிகள் அப்படியே உள்ளன. இனியும் ஆட்சியாளர்கள் வெற்று வாக்குறுதிகளால் விவசாயிகளை ஏமாற்றமுடியாது. நாங்களும் விடப்போவதில்லை ’’ என்று கர்ஜித்தார் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அஜித் நாவ்லே.

இந்த நீண்ட பயணத்தில் மராத்வாடா, ராய்காட், விதர்பா, மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். பேரணி ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊரைக் கடந்து செல்லச் செல்ல விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்தப்பேரணியில் பங்கேற்றவர்களில் கணிசமானோர் ஆதிவாசி மக்கள். அவர்கள் பாரம்பரிய உடைகளுடன் தங்களது உழவுக்கருவிகளுடன் பேரணியில் கலந்துகொண்டனர். இதனால் இந்த ஊர்வலத்தை வேடிக்கை பார்ப்பதற்கே வழியெங்கும் மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.

தலைமுறை தலைமுறையாக:
“நாங்கள் தலைமுறை தலைமுறையாக நிலத்தில் உழுது வருகிறோம். இப்போது இந்த நிலம் வனப்பகுதிக்கு உட்பட்டது என்று கூறி எங்களை வனத்துறையினர் விரட்டப்பார்க்கிறார்கள். 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டத்தின் படி எங்களுக்கு இந்த நிலத்தைச் சொந்தமாக்குவதாக ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் அதை அவர்கள் காப்பாற்ற வில்லை என்ற வருத்தத்துடன் கூறினார் நீண்டபயணத்தில் பங்கேற்ற ஒருவிவசாயி. ஒரு ஏக்கரில் விவசாயம் செய்ய 12 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. அதுவும் மழைநன்றாக பொழிந்தால் ஏக்கர் ஒன்றுக்கு 15 குவிண்டால் நெல் கிடைக்கும். தற்போது சந்தையில் ஒரு குவிண்டால் நெல் ஆயிரம் ரூபாய்க்குத்தான் விலை போகிறது. நிலைமை இப்படி இருந்தால் நாங்கள் எங்கே வாழமுடியும்? குழந்தைகளை எப்படிபடிக்க வைப்பது? எனவே தான் இந்த நீண்ட பயணம் குறித்து கேள்விப் பட்டவுடன் நானும் கலந்து கொண்டேன் என்கிறார் மற்றொரு விவசாயி.

 

களைப்பை போக்கிய பாடல்கள்:
நீண்ட பயணம் சென்ற வழியெங்கும் கடும் வெயில் வீசியது. இதனால் ஆண்கள் கைக்குட்டைகளாலும், பெண்கள் சேலைகளை கொண்டும் தலையில் சுற்றிக்கொண்டு தங்களது பயணத்தை தொடர்ந்தனர். ஒவ்வொருவரும் உடைகள், தண்ணீர் பாட்டில்கள், கோதுமை, கம்பு மற்றும் இதர உணவு தானியங்களை கொண்ட பைகளை சுமந்தவாறே நடைபோட்டனர். உணவு கிடைக்காத இடங்களில் சாலையோரம் அடுப்பு முட்டி சப்பாத்தி செய்து பகல் மற்றும் இரவில் சாப்பிட அதை காகிதத்தாளில் சுற்றி வைத்துக்கொண்டனர். சாலையோரம் தான் இவர்களின் தங்குமிடம். அங்கேயே சாப்பிட்டனர். அங்கேயே உறங்கினர். இப்படியே ஐந்து நாட்கள் கடந்தன. நீண்டநேரம் நடந்து வந்து களைப்பை போக்கும் வகையில் ஆதிவாசிகள் பலர் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களை பாடினர். சில இடங்களில் ஆன்மீக பாடல்களையும் கேட்கமுடிந்தது.

பூசணியை நிலத்திலேயே அழுகவிட்டுவிட்டேன்:
நீண்ட பயணத்தில் பங்கேற்ற மற்றொரு விவசாயி சஞ்ஜெய் பேராஸ்தே. இவர் நாசிக்கில் இருந்து 26கி.மீ அப்பால் உள்ள டிங்கோரி தாலுகாவில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு 8 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமென்று மாநில அரசு அறிவித்தபோது மகிழ்ச்சியடைந்த விவசாயிகளில் அவரும் ஒருவர். ஆனால் முதலமைச்சரோ ரூ.1.5லட்சம் வரையுள்ள கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யமுடியும் என்று சொல்லி எங்களைக் கைவிரித்துவிட்டார் என்கிறார் அவர். 48வயதாகும் பேராஸ்தே தனது 2.5 ஏக்கர் நிலத்தில் மஞ்சள் பூசணிக்காய் பயிரிட்டு இம்மாதம் அறுவடை செய்தார். ஆனால் அவர் விளைவித்த பூசணிக்காய் கிலோ 2 ரூபாய்க்குத்தான் விலைபோனது. விலை கட்டுபடியாகாத காரணத்தால் நிலத்திலேயே அவற்றை அழுக வைத்துவிட்டேன் என்று அவர் கூறும்போதே கண்களில் தண்ணீர் முட்டுகிறது.

விவசாயிகள் பேரணியில் பங்கேற்ற பல விவசாயிகள் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளைப் பற்றி பேசினர். குறைந்தபட்ச ஆதரவுவிலை, கடன்கள் தள்ளுபடி, நம்பிக்கையான பாசன ஏற்பாடு ஆகியவற்றை அவர் அரசுக்குப் பரிந்துரைத்திருந்தார்.

நான் விவசாயி அல்ல:
பேரணியில் பங்கேற்ற விவசாயிகளில் பலர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் பேரணிக்கு இடை இடையே கடவுளை போற்றும் பாடல்களையும் பாடிக்கொண்டே நடந்து வந்தனர். ஆதிவாசிகள் சிலர் தங்களுக்கே உரிய இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டிருந்தனர். சிலர் தங்களுக்கு தெரிந்த பாடல்களை பாடினர். அப்படி ஒருவர் தான் ருக்மாபாய் பெண்டுகோலே. கையில் செங்கொடியுடன் நடனமாடிக்கொண்டிருந்த அவர் ஒரு விவசாய கூலித்தொழிலாளி. 60வயதாகும் அவர் வாரத்தில் 3நாட்கள் நிலத்தில் உழைக்கிறார். இதற்காக அவருக்குக் கிடைக்கும் கூலி நாள் ஒன்றுக்கு ரூ.200. இந்த நீண்ட பயணத்தில் 6 நாட்கள் கலந்துகொண்டதால் அவர் 1200 ரூபாயை இழந்து விட்டார். நான் ஒன்றும் விவசாயி அல்ல. நான் எந்த விளைபொருளையும் விளைவிக்கவில்லை. ஆனால் எங்களது கிராமத்தில் உள்ள விவசாயி நிலத்தை இழந்தால் நான் வேலையை இழக்க வேண்டியிருக்கும். எனவே தான் எங்களது கிராம விவசாயிகளுடன் நீண்ட பயணத்தில் கலந்து கொண்டேன் என்கிறார்.

மும்பையில் நுழைந்தது:
கடந்த 6 நாட்களாகச் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைநகர் மும்பை நோக்கி வந்த விவசாயிகளின் நீண்ட பயணம் ஞாயிறன்று பகல் மும்பைக்குள் நுழைந்தது. அவர்களோடு விவசாயிகளின் குடும்பத்தினரும் கலந்துகொண்டதால் எண்ணிக்கை 50ஆயிரமாக அதிகரித்தது. இதனால் நாசிக்-மும்பை சாலையில் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது. பேரணி வரும் சாலையை பயன்படுத்த வேண்டாம் என்று சனிக்கிழமையே மும்பை நகரமக்களை காவல்துறை எச்சரித்துவிட்டது. விவசாயிகளின் பேரணி என்பதால் மும்பையில் ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். டீ கடைகள், ஹோட்டல்கள், மளிகைக் கடைகள் என மும்பை நகரம் முழுவதும் விவசாயிகளின் போராட்டம் விவாதமாக மாறியுள்ளது. திங்கட்கிழமையன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் போக்குவரத்திற்கு மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று சட்டப்பேரவை முற்றுகை:
விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தித் திட்டமிட்டபடி திங்களன்று (மார்ச் 12) சட்டமன்றம் முற்றுகையிடப்படும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே கூறிவிட்டார். நீண்ட பயணத்தை கண்டு நடுங்கியுள்ள பாஜக அரசு, விவசாயிகளை சமாதானப்படுத்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜனை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பியது. விவசாயிகளின் கோரிக்கைகளை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கவனத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்றுவதாகவும் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கைவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தங்களது நிலையில் இருந்து சற்றும் பின்வாங்கவில்லை. “ இப்படிப்பட்ட வெற்றுவாக்குறுதிகளை கேட்டு கேட்டு சலித்துவிட்டோம். திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று முதலமைச்சரிடம் போய்ச் சொல்லுங்கள்’’ என்று அவரைத் திருப்பி அனுப்பிவிட்டனர்.

இதனிடையே பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே தனது மகன் ஆதித்ய தாக்ரேவை அனுப்பியிருந்தார். அவருடன் சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் முண்டேவும் வந்திருந்தார். விவசாயிகளைச் சந்தித்துப்பேசிய அவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் சட்டப்பேரவை கூட்டத்தில் கடன் தள்ளுபடி பிரச்சனையை எழுப்பப்போவதாகவும் கூறினர். அப்போது அங்கு குழுமியிருந்த விவசாயிகள் வெறும் ஆதரவு போதாது. நீங்களோ ஆளும்கட்சி கூட்டணியில் உள்ளவர்கள். உங்களது கட்சியின் அடையாளமோ புலி. விவசாயிகளின் நலனில் உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்கமானால் இங்கே கர்ஜித்ததைப் போல அமைச்சரவையிலும் சட்டமன்றத்திலும் கர்ஜிக்கத் தயாரா என்று கேட்டனர். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து ஞாயிறன்று இரவு வரை ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலைவர்கள் வந்தவண்ணம் இருந்தனர். திங்களன்று நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டம் மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் தலையெழுத்தை மட்டுமல்ல வருங்காலத்தில் நாட்டின் தலையெழுத்தையே மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

-அ.விஜயகுமார்

Leave a Reply

You must be logged in to post a comment.