திருப்பூர், மார்ச் 11 –
வரலாaற்றை மறக்கும் எந்த இனமும் முன்னேறாது என்று காவல் துறை மேற்கு மண்டலத் தலைவர் அ.பாரி கூறினார்.

திருப்பூர் தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளி ஆகியன இணைந்து நடத்திய ஆண்டுவிழா சிங்கனூர் அருகே அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய மேற்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் அ.பாரி தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தியும், தமிழின் சிறப்பை விளக்கியும் உரையாற்றினார். அப்போது,  ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் படிக்கும்போதுதான் புரிந்துகொண்டு படிக்க முடியும். அப்படிப் படிப்பதின் மூலம்தான் அறிவு வளரும். அவரவர்களுக்கு அவரவர் தாய்மொழியே உயர்ந்தது. நாம் உலகிலேயே மிக உயர்ந்த மொழியைத் தாய்மொழியாகப் பெற்றிருக்கிறோம். அது நமக்குப் பெருமை தரக்கூடியது.ஒன்றரை அடிகளிலேயே உலகைஅளந்த திருக்குறள் நம்முடையது, துன்பம் நேர்கையில் தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்டும்படி பாரதிதாசன் தாய் தன் மகளிடம்
வேண்டுவார் என்று விளக்கினார்.

மேலும், சங்ககாலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீட்டையும் நாட்டையும் காத்து நின்றனர், நடுகற்கள் போரில் உயிர்துறந்த வீரர்களை வழிபடுவதற்கானது, வரலாற்றை மறக்கும் எந்த இனமும் முன்னேறாது என்றும் எடுத்துரைத்தார். மேலும், சங்க இலக்கியங்களிலிருந்து பாடல்களைத் மேற்கோள் காட்டி பேசியதுடன், விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.முன்னதாக, இவ்விழாவில் பள்ளி மேலாளர் ஹேமா வரவேற்றார். பள்ளித் தாளாளர் எழில் சுப்பிரமணியன் தலைமையுரை ஆற்றினார். பள்ளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் குறிஞ்சி, மாதப்பூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துரத்தினம், தண்ணீர்ப் பந்தல் நடராஜன், சரண்யா கார்மென்ட்ஸ் துரைசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி அறக்கட்டளை உறுப்பினர் திருப்பதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மேலும், மாணவர் கலைநிகழ்ச்சிகளும், சிலம்பு, யோகா, கராத்தே நிகழ்வுகளும் இடம்பெற்றன. முடிவில், பள்ளி ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: