கோவை, மார்ச் 11-
கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியை கருத்தில் கொண்டு வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்கு சிறப்பு ஏற்பாடுகள் வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திலுள்ள வனப்ப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் புதிதாக தொட்டிகள் அமைத்தும், ஏற்கனவே வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்பியும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காட்டிற்குள் வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக கடந்த ஆண்டுவரை 14 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ஆண்டு புதிதாக இரண்டு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இத்தொட்டிகளுக்கு பைப்லைன் அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் வருடம் முழுவதும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இருந்தபோதிலும் கோடை வறட்சியால் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதில்லை.ஆகவே, தொட்டிகளுக்கு லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதன்படி ஞாயிறன்று மேட்டுப்பாளையம் வனச்சரகம், நெல்லிமலை காப்புக்காடு, குரும்பனூர் சரகப் பகுதியில் வனத்திற்குள் உள்ள தொட்டிக்கு லாரி மூலம் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டது. மேலும், வனவிலங்குகளுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டை ஈடு செய்ய, தண்ணீர் தொட்டியைச் சுற்றிலும் உப்புக் கட்டிகளும் வைக்கப்பட்டன. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், குடிநீருக்காக வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியே வருவது தவிர்க்கப்படும் என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: