சங்கர் வகாரே தனது கையில் இருந்த பிளாஸ்டிக் பையை தரையில் எறிந்து விட்டு, கையில் வைத்திருக்கும் தடியின் மீது சற்றே சாய்ந்து கொண்டு மூச்சு வாங்கிக் கொள்கிறார். மூச்சிரைக்க உட்கார்ந்து கொண்ட அவர் பின்னர் கண்களை மூடிக் கொள்கிறார். அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு அவரது கண்கள் மூடிய நிலையிலேயே இருக்கின்றன. அந்த 65 வயது மனிதர் இன்றைய தினம் மிக நீண்ட தூரம் நடந்திருக்கிறார். அந்த இருட்டிற்குள் 25000க்கும் அதிகமான விவசாயிகள் அவரைச் சுற்றிலும் இருப்பது தெரிகிறது. நாசிக் – ஆக்ரா நெடுஞ்சாலையில் இகத்புரியின் ராய்காட்நகர் பகுதியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அவர்  “எங்களுடைய உரிமைகளுக்காக நாங்கள் அவசியம் போராட வேண்டியிருக்கிறது” என்கிறார். மார்ச் 6 அன்று பரபரப்பான செவ்வாய்க்கிழமை மாலையில் நாசிக் நகரிலிருந்து தொடங்கிய திரளான விவசாயிகள் பேரணியின் முதலாவது நாளில் அவர்கள் அங்கே தங்கியிருக்கின்றனர். மார்ச் 11 ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையைச் சென்றடையத் திட்டமிட்டிருக்கின்றனர். அதற்கு அடுத்த நாள், மாநில அரசாங்க அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மும்பையில் உள்ள சட்டமன்ற வளாகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

இந்தப் பேரணிக்கான அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவான அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் (அகில பாரதிய கிசான் சபா) விடுத்திருந்தது. அரசு வெறும் வெற்று வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்ற முடியாது என்கிறார் பேரணியின் அமைப்பாளர்களில் ஒருவரான கிசான் சபாவின் பொதுச் செயலாளர் அஜித் நவாலே. வனநிலங்களில் விவசாயிகளுக்கு உள்ள உரிமைகளைப் பெறுவது, பயிர்களுக்கான உரிய விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி என்று பல கோரிக்கைகளை முன்வைத்து 2015ஆம் ஆண்டிலும் இதுபோன்று எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தோம் என்று கூறுகிற அவர், அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாக நடித்து வருகிறது. இப்போது இல்லை என்றால் இனி ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்று அவர் கூறுகிறார்.

பேரணி நகர்ந்து செல்லச் செல்ல, மராத்வாடா, ராய்காட், விதர்பா மற்றும் மஹாராஷ்டிராவின் பிற மாவட்டங்களில் இருந்து அதிகமான விவசாயிகள் பேரணியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணி தொடங்கிய இடத்தில் இருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மும்பையை அடையும் போது விவசாயிகளின் எண்ணிக்கை பலமடங்கு பெருகும். இப்போதைக்கு ​​நாசிக் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலிருந்தே பெரும்பாலான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதிவாசி சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

கோலி மஹாதேவ் சமுதாயத்தைச் சார்ந்த வகாரே, நாசிக்கின் திண்டோரி தாலுக்காவில் உள்ள நலேகான் கிராமத்தில் இருந்து வந்திருக்கிறார். நலேகானில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாசிக் நகரில் உள்ள சிபிஎஸ் சதுக்கம் என்ற இடத்திற்கு அவர் நடந்தே வந்திருந்தார். அன்றைய தினம்  பிற்பகலில் அந்த சதுக்கம் இருக்கும் பகுதியில் இருந்துதான் மும்பைக்குச் செல்லும் அந்த நீண்ட நடைப் பயணம் தொடங்கியது.

தலைமுறை தலைமுறையாக நாங்கள் பயிரிட்டு வருகின்ற நிலங்கள் இன்னும் வனத்துறையின் கீழேயே இருந்து வருகின்றன என்று கூறுகின்ற வகாரே “2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிவாசி விவசாயிகளுக்கு நில உரிமைகளை வழங்குவோம் என்பதாக  வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், நாங்கள் இன்னும் அந்த நிலங்களின் உரிமையாளர்களாக ஆக முடியவில்லை” என்பதையும் தெரிவிக்கிறார். வகாரேயின் கிராமத்தில் கிட்டத்தட்ட எல்லோருமே நெல் பயிரிடுகின்றனர். “ஒரு ஏக்கருக்கு உற்பத்தி செலவு 12,000 ரூபாய் ஆகிறது. மழை நன்றாகப் பெய்தால், ஒரு ஏக்கருக்கு 15 குவிண்டால் நெல் கிடைக்கும். நடப்புச் சந்தை விலை கிலோ 10 ரூபாய் (குவிண்டாலுக்கு 1,000 ரூபாய்) ஆகும். எங்களால் எப்படி தாக்குப் பிடிக்க முடியும்? இந்தப் பேரணி பற்றி அறிந்து கொண்டபோது, ​​என்ன வந்தாலும் பரவாயில்லை என்று அதில் கலந்துகொள்ள நான் முடிவு செய்தேன்” என்று சொல்கிறார் வகாரே.

மதியம் ஒரு மணிக்கு நான் சிபிஎஸ் சதுக்கத்திற்குச் சென்றடைந்தேன். அந்த வேளையில், அங்கே கூட்டம் அவ்வளவாக இருக்கவில்லை என்பதால் அங்கே காத்திருந்தேன். படிப்படியாக, ஜீப்புகளில் விவசாயிகள் வந்திறங்கினர். சிவப்பு நிறத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகள் மற்றும் தொப்பிகளால் அந்த தெரு முழுவதும் நிரம்பத் தொடங்கியது. சில ஆண்கள் தங்கள் கைக்குட்டைகளை நெற்றியில் கட்டியிருந்தனர். பெண்கள் தகிக்கும் சூரியனிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக சேலையால் தலையை மூடிக் கொண்டிருந்தனர். ஒரு வார காலத்திற்கு நடைபெற உள்ள இந்தப் பேரணிக்குத் தேவையான தங்களுடைய ஆடைகள், கோதுமை, அரிசி, கம்பு மற்றும் சில உணவு தானியங்களை பெரும்பாலானவர்கள் பிளாஸ்டிக் பைகள் அல்லது தோள் பைகளில் கொண்டு வந்திருந்தனர்.

பிற்பகல் 2:30 மணி அளவில், செய்தித்தாள்களில் சுற்றி, தங்கள் பைகளுக்குள் வைத்து கொண்டு வந்திருந்த சப்பாத்தி, சப்ஜியை ஆண்களும், பெண்களும் எடுக்கத் தொடங்கினர். சாலையில் உட்கார்ந்து தங்களுடைய மதிய உணவைச் சாப்பிடத் துவங்கினர். அருகே இருந்த சில ஆதிவாசி விவசாயிகள் நேரத்தைக் கடத்துவதற்காக பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். நாசிக் மாவட்டத்தின் சுர்கானா தாலுகாவில் உள்ள பாங்கர்னெ கிராமத்தில் இருந்து வந்திருந்த பாலு பவார், விஷ்ணு பவார், யேவாஜி பித்தே ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். காவல்துறையினரால் இப்போது போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட சாலையின் நடுவே இருந்த பிரிவினைச் சுவரில் அமர்ந்து கொண்டு பாலு துந்தனாவையும், விஷ்ணு டப்லியையும் இசைத்துக் கொண்டிருக்க யேவாஜி தாளம் போட்டுக் கொண்டிருந்தார். நீங்கள் என்ன பாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்ட போது, இது எங்கள் தெய்வமான கந்தரயாவிற்கான பாடல் என்று கூறினார்கள்.

இந்த மூன்று இசைக்கலைஞர்களும் கோலி மஹாதேவ் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய குற்றச்சாட்டுகளும் வகாரே வைத்த குற்றச்சாட்டுகளை ஒத்ததாகவே இருந்தன. “நான் ஐந்து ஏக்கர் நிலத்தை உழுது கொண்டிருக்கிறேன். முறைப்படி பார்த்தால் அந்த நிலம் என்னுடையது. ஆனாலும் இப்போதும் நான் வனத்துறை அதிகாரிகளின் கருணையில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அங்கிருந்து போகச் சொல்லலாம். இந்த அதிகாரிகள் பக்கத்து கிராமத்தில் உள்ள சில விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்த நிலத்தில் மரங்களை நட ஆரம்பித்தனர். அடுத்தது நாங்களாகத்தான் இருக்க முடியும்” என்று விஷ்ணு கூறினார்.

நாசிக் நகரத்திலிருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் திண்டோரி தாலுக்காவில் உள்ள திண்டோரி  கிராமத்திலிருந்து இந்த பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்த சஞ்சய் போரெஸ்டே. தனக்கு ரூ.8 லட்சத்திற்கும் மேலாக கடன் இருக்கிறது என்றார்.  “அரசாங்கம் முதலில் கடன் தள்ளுபடி என்று அறிவித்தபோது, ​​நான் இந்த கடனில் இருந்து விடுவிக்கப்பட்டதாக நினைத்து நிம்மதியாக இருந்தேன். ஆனால் முதல்வரோ 1.5 லட்சம்தான் அதிகபட்ச தொகை என்று மிக மோசமான அறிவிப்பை வெளியிட்டார்” என்று வருத்தப்பட்டார்.  48 வயதாகும் அவர் 2.5 ஏக்கர் நிலத்தில் இந்த மாதம் பூசணி அறுவடை செய்திருக்கிறார். “நான் ஒரு கிலோ 2 ரூபாய்க்கு விற்க வேண்டும், ஆனால் விலை வீழ்ச்சியடைந்து விட்டது. பூசணி அழுகிப் போவதாகவும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மராத்வாடாவில் இருந்த போது, ​​ குறைந்தபட்ச ஆதரவு விலை, கடனை ஒரேயடியாகத் தள்ளுபடி செய்வது, நம்பகமான பாசன முறைகள் என்று சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை என்னிடம் கூறினர். இப்போது நாசிக்கில் கூடியிருக்கும் பலருக்கும் இந்த கோரிக்கைகள் முக்கியமாக இருந்த போதிலும், அவர்களுடைய முக்கியமான கவனம் நில உரிமைகள் தொடர்பாகவே இருக்கிறது. பேரணி முன்னேறிச் செல்லும் போது அதில் இணைகின்ற விவசாயிகளின் கவலைகள் மாறுபடக் கூடும்.

பிற்பகல் 3 மணிக்கு அமைப்பாளர்கள் மக்கள் கூட்டத்தை நோக்கி பேச ஆரம்பித்தனர். 4 மணிக்கு நாசிக் – ஆக்ரா நெடுஞ்சாலையை நோக்கி தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நடக்க ஆரம்பித்தனர். பேரணியின் முன்னால் கையில் ஒரு சிவப்பு கொடியை வைத்துக் கொண்டு 60 வயதான ருக்மபாய் பெண்ட்குலே நடனமாடிக் கொண்டு சென்றார். திண்டோரி தாலுக்காவில் உள்ள டோண்டகான் கிராமத்திலிருந்து வந்திருக்கும் விவசாயத் தொழிலாளி இந்த ருக்மபாய். அவர் நாளொன்றுக்கு ரூ.200 என்று ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்பவர். ஆறு நாட்களுக்கு இந்தப் பேரணியில் கலந்து கொள்வதன் மூலம் அவருக்கு குறைந்தது ரூ. 600 இழப்பு ஏற்படும். “எந்தவொரு பயிரையும் நான் பயிரிடவில்லை என்றாலும், என் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நிலத்தை வனத்துறையிடம் இழந்து விட்டால், எனக்கும் வேலை இல்லாமல் போய் விடும்” என்று அவர் கூறுகிறார். ஆனால் அரசாங்கம் இதில் குறுக்கிட்டு தீர்வு காணுமா என்று நான் அவரிடம் கேட்ட போது, அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் என்று கேட்டு விட்டு அவர் சிரிக்கிறார்.

இது போன்ற போராட்டங்கள் நிச்சயம் அரசாங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நவாலே கூறுகிறார். “நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்ற பிரச்சினைகள் இப்போது அனைவரும் பேசுகின்ற வகையில் ஆகிவிட்டன. ஏராளமான தடைகள் இருந்தாலும், கடன் தள்ளுபடியை வழங்குமாறு அரசாங்கம் நிர்பந்தத்திற்குள்ளானது. நாங்கள் அதனை கொள்ளை மீட்பு என்றே அழைக்கிறோம். அரசாங்கங்களால் பல ஆண்டுகளாக எங்களுடைய முந்தைய தலைமுறையினர் சூறையாடப்பட்டு, சுரண்டப்பட்டு வந்தனர். நாங்கள் படிப்படியாக அதைத் திரும்ப எடுத்துக் கொள்கிறோம்” என்கிறார் அவர்.

ராய்காட்நகரை அடைவதற்கு முன்பாக ஒரு சிறிய இடைவேளை. நேரத்தில், வழிநெடுக அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்ற தண்ணீர் தொட்டிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பிக் கொள்கின்றனர். ஐந்து மணி நேரம் கழித்து, இரவு சுமார் 9 மணியளவில் வால்டேவி அணைக்கு அருகே உள்ள நெடுஞ்சாலைக்கு அருகே வெறும் தரையில் அவர்கள் தங்களுடைய இரவு நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

தங்களுடைய பைகளில் எடுத்துச் சென்ற சப்பாத்தி, காய்கறிகளுடன் இரவு சாப்பாட்டை முடித்த பிறகு, சில விவசாயிகள், அந்தப் பேரணியுடன் வந்த டிரக் ஒன்றில் இருந்து பாட ஆரம்பிக்கின்றனர். அந்த இருண்ட இரவிலும் நாட்டுப்புறப் பாடல்கள் ஒலிக்க, ஆண்களில் சிலர் ஒருவருக்கொருவர் தங்கள் கைகளைப் பின்னால் கோர்த்துக் கொண்டு அரை வட்ட வடிவில் நின்று கொண்டு இசைக்கு ஏற்றவாறு நடனமாடுகின்றனர்.

ஒரு போர்வைக்குள் தன்னை மூடிக் கொண்டிருக்கும் வகாரே அவர்களது ஆற்றலை எண்ணி வியக்கிறார். எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. கால்கள் வலிக்கின்றன என்று கூறிய அவரிடம் அடுத்த ஆறு நாட்களுக்கு இந்த நடையை உங்களால் தொடர முடியுமா என்று நான் கேட்ட போது, “நிச்சயமாக முடியும். இப்போது நான் தூங்கப் போகிறேன்” என்று கூறினார். “

-எம்.என்.பர்த்

நன்றி:  https://ruralindiaonline.org/articles/from-farm-and-forest-long-march-to-mumbai

தமிழில்: முனைவர் தா. சந்திரகுரு விருதுநகர்.

Leave a Reply

You must be logged in to post a comment.