சென்னை, மார்ச் 11-
மகளிர் ஆணையம் நான்கு சுவற்றுக்குள் அடைபடாமல் களத்தில் இறங்கி மகளிர் நிலைகுறித்து அறிந்து பணியாற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி கூறினார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடசென்னை மாவட்டத் தில் உள்ள பெண்கள் அமைப்புகள் இணைந்து அயனபுரத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், படித்த மற்றும் பாமர பெண்களின் வேலைவாய்ப்பை மத்திய மாநில அரசுகள் உத்திரவாதப்படுத்த தவறிவிட்டன என்றார். சிறுதொழில் மேம் பாட்டிற்காக ஒதுக்கும் நிதியை ரூ. 85 கோடியிலிருந்து ரூ33 கோடியாகவும் சுயதொழிலுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ 55 ஆயிரம் கோடியிலிருந்து ரூ18.333 கோடியாகவும் மத்திய அரசு குறைத்துவிட்டது. இதனால் பெண்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தலித், பழங்குடி மக்களின் மேம்பாட்டு நிதியும் வெட்டப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. கிராமப் புற பெண்களின் வாழ்வாதாரத் திற்காக 100 நாள் வேலைத்திட்டமான கிராமப்புற தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு நீர்த்துப்போகச்செய்துள்ளது. தமிழ்நாட்டில் 100க்கு 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அகில இந்திய அளவில் ரூ2 ஆயிரம் கோடியும் தமிழகத்திற்கு 300 கோடிரூபாய் நிலுவையில் உள்ளது. இந்த கூலி பாக்கியால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைக்காக இடம் பெயருதலுக்கு ஆளாகின்றனர். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் 10 ஸ்கேன் மையங்கள் கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொன்னதாகவும் இதனால் பெண் சிசுக்கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகிறார். இது காலங்கடந்த நடவடிக்கையாகும்.விழுப்புரம் வெள்ளமூத்தூர் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இதுநாள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அரசின் கையாலாகாதனத்தையே காட்டுகிறது. இந்தியாவில் 2016ல் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் என 3.4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கைகள்:
அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும், பெண்களுக்கு சுயதொழில் பயிற்சியை மாவட்டம் தோறும் வழங்கவேண்டும், சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும், கிராமப்புற பெண்களுக்கான புதிய வேலைத்திட்டங்களை நகராட்சி, மாநகராட்சி, மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தவேண்டும்,பத்து பேருக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்கவேண்டும், சமவேலைக்குசமகூலி வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Leave a Reply

You must be logged in to post a comment.