ஈரோடு, மார்ச் 11-
ஈரோட்டிலுள்ள பெரியார் நினைவகத்தை பார்வையிட்ட நடிகர் கமலஹாசன், அது தனது தந்தையின் இல்லம் என தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் ஞாயிறன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டார். இதன்ஒருபகுதியாக ஈரோடு பெரியார் வீதியில் உள்ள பெரியார், அண்ணா நினைவகத்திற்கு சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அரியவகை புகைப்படங்களை பார்வையிட்டார். பின்பு, பெரியார் பயன்படுத்திய அறையில் உள்ள பொருள்களையும், அண்ணா நினைவகத்தில் உள்ள பொருள்களையும் பார்வையிட்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் பெரியார், அண்ணா நினைவகத்திற்கு வருவதற்கு காரணம் அது எனது தந்தையின் இல்லம். சினிமாவில் இருக்கும் புகழ் மட்டுமே, அரசியல் வெற்றிக்கு போதாது. மக்களின் அன்பும் வேண்டும். நானும் மக்களின் ஒருவன்தான். மாற்றம் மக்கள் கையில் உள்ளது என்றார்.

மேலும், மக்கள் நீதி மய்யத்தின் பேனர்கள் அகற்றப்பட்டு ஆளுங்கட்சிகள் அழுத்தம் கொடுத்தால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.ஜிஎஸ்டி வரிவிதிப்பில் திரைத்துறை பாதிக்கப்பட்டிருந்தபோது, முதலில் குரல் கொடுத்தது நான்தான். ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல்காந்தி கூறுவது மனிதநேயம் மிக்கது. கிறிஸ்துவ அமைப்புகள் நிதி உதவி செய்து வருவதாக கூறுவது நகைச்சுவையானது. காவிரி பிரச்சனையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.