கடலூர் மாவட்டம் விருத்தாசலம், சிதம்பரம் வட்டங் களில் ஆதிவராகநத்தம், தர்மநல்லூர், அதியமான்குப்பம் ஆகிய ஊர்களில் ஜே. ஆர் சிவராமகிருஷ்ணன் அவர்களின் களஆய்வில் இரும்புக்கால ஈமத் தாழிகள், கருப்பு, சிவப்பு மட்பாண்டப் பொருட்கள் முதலான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. சுடுமண் உறைக் கிணறு, சுடுமண் பொம்மைகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் சோழபுரம், பிரபவலூர், முத்துப்பட்டி, அழகாபுரி, கொல்லக்குடி, செவ்வூர், குளத்துப்பட்டி முதலான ஊர்களில் வீ. முத்துக்குமார் என்பவர் களஆய்வு மேற்கொண்டதில் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், தாங்கிகள், தட்டுகள், மூடிகள், கிண்ணங்கள், ஈமப் பேழைகள், பல அளவுகளில் பானைகள் கண்டறியப்பட்டுள்ளன. கல்வட்டம், குத்துக் கல் முதலானவையும் இப்பகுதியில் காணப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள பூஞ்சேரியில் து.தயாளன் என்பவர்கள ஆய்வு மேற்கொண்டபொழுது இரும்புக்கால பானையோடுகள், கல்வட்டம், முதுமக்கள் தாழிகள், சார்கோ பேகஸ் (ஈமத்தாழி) ஆகியன இருப்பது கண்டறியப்பட்டது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் அம்பி என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு பெ. லெனின் என்பவர் கள ஆய்வு செய்ததில் பலவண்ணங்கள் பூசப்பட்ட பானையோடுகள், கட்டுமானப் பகுதிகள், செங்கற்கள், தட்டு, கிண்ணம், வட்டில் போன்றவையும் கிடைத்தன. டி.பி. கனகரத்தினம் என்பவர் கோவை மாவட்டம்குருடி மலையின் அடிவாரத்தில் வீரபாண்டி, சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம் ஆகிய ஊர்களில் இரும்புக்கால எச்சங்களாக கல்பதுக்கைகள், முதுமக்கள் தாழிகள், கருப்பு, சிவப்பு பானையோடுகள் ஆகியன கிடைப்பதை கள ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்.

த.தங்கதுரை என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் வில்லுனி ஆற்றின்கரைப்பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வில் பெருங்கற்கால வாழ்விடங்கள் மற்றும் இரும்பு உருக்குமிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வடக்கு அக்ரஹாரம், பரவக் கோட்டை, தெற்குநிருநாளூர், இராமசாமிபுரம், தொழுவங்காடு, மயிலாடிக்காடு, தெற்கு அரையப்பட்டி, வன்னியன் விடுதி, மாடக்கி, கரிசக்காடு, குளமங்கலம், தெற்கு நெய்தவத்தளி, வல்லவாரி, விளாங்குளம், வில்லுனிவயல், உழுந்தங் காடு, ஆயிங்குடி, ரெட்டவயல், ஊமத்த நாடு போன்ற இடங்களிலும் பெருங்கற்கால தொல்லியல் இடங்களையும், வரலாற்றுக்கால வாழ்விடப் பகுதிகளையும் கண்டறிந்துள்ளார். ஓமலூர் வட்டம் அண்ணடிக்கரை, செம்மானப்பட்டி, கல்லுக்கோட்டை, ஆரியகவுண்டனூர் ஆகிய இடங்களில் இரா. ரமேஷ் என்பவர் கள ஆய்வு மேற்கொண்டதில் கற்குவை, கற்பதுக்கை, இரும்புக்கால ஈமச் சின்னங்கள், கருப்பு சிவப்பு பானையோடுகள், இரண்டு நெடுங்கற்கள், கல்வட்டங்கள் முதலானவை கண்டறியப்பட்டுள்ளன.

ஆர்க்காடு வட்டம் அரும்பாக்கத்திற்கு மேற்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் மேச்சேரி ஊர் பாசனக் கால்வாய் பகுதியில் அமைந்துள்ள மேட்டு நிலத்தில் ஆய்வாளர் கி. குமார் களஆய்வு மேற்கொண்டார். இடை மற்றும் கடைப் பழங்கற்கால கருவிகள், இரும்புக் கால தடயங்கள், இரும்பு உருக்கு உலைகள், சுடுமண்ணாலான குழாய்கள், கருப்பு, சிவப்பு பானையோடுகள், பச்சை மற்றும் நீல நிற மணிகள் முதலானவை கண்டறியப்பட்டுள்ளன. புதுக்கோட்டை வெள்ளாற்றுப் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் முதுமக்கள் தாழிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. கையினால் வனையப்பட்ட தாழிகள், வாய்அகன்ற தாழிகள், கூர்மையாக அமைக்கப்பட்ட தாழிகள் முதலானவை கிடைத் துள்ளன. மேலும் அறந்தாங்கி வட்டம் அமர சமுத்திரம், அழியா நிலை, ஆலங்குடி, ஆளப்பிறந்தான், இடையார், கருவிடச் சேரி, காயக்காடு, கீழ்காத்தி, குறும்பூர், கொங்கன் கிராமம், தந்தானி, துரைராசபுரம், தெற்குத் திருநாளூர், நாயக்கப் பட்டி, பஞ்சாத்தி, பத்தரசர்கோட்டை, பரமந்தூர், பாண்டிக்குடி, பாலகிருஷ்ணபுரம், புதுவாக்கோட்டை, புள்ளவயல், பெருமாள் பட்டி, மாங்குடி, மேற்கு வல்வாரி, வடக்குமேல் மங்கலம், வடநற்பவளக்குடி, வீரமங்கலம் மற்றும் ஆவுடையார் கோவில் வட்டம் – அமரடக்கி, ஆவணம், கள்ளக்காத்தன், காரக்கடி, சிறுகாச வயல், சிறுமருதூர், பரிவீர மங்கலம், பனைவயல், பெருமருதூர் மற்றும் மணமேல்குடி வட்டம் – கார்க்கமங்கலம், தண்டலை, பட்டங் காடு, மஞ்சக்குடி, ரெட்டபாளயம் முதலான இடங்களில் வெ.யோகேஸ்வரன் என்பவர் மேற்கொண்ட களஆய்வில் இரும்புக் கால தாழிகள் மற்றும் தொல்லியல் பொருட்களைக் கண்டறிந்துள்ளார்.

பெரம்பலூர் வட்டாரத்தில் பழங்கற்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலத் தொல்லியல் தடயங்களை எம். எஸ். ராம்ஜி என்பவர் கள ஆய்வின் வழி கண்டறிந்துள்ளார். விளாங்குடி, பர்மாகாலனி, பார்ப்பனச்சேரி, மேட்டுக்கிருஷ்ணா புரம், கல்லக்குடி, சாத்தம்பாடி, புதூர், ஓட்டக்கோவில் போன்ற இடங்களில் புதிய கற்கால பண்பாட்டு இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன. மருதையாற்றை ஒட்டி இப்பண்பாட்டிடங்கள் அமைந்துள்ளன. புதிய கற்கால சாம்பல் நிற மட்பாண்டத் துண்டு பார்ப்பனச் சேரி, அய்கால் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. மேலும், கீழக்கொளத்தூர், ஏலாக்குறிச்சி, திருமானூர், பர்மா காலனி, குணமங்கலம், சாத்தம்பாடி, முட்டுவாஞ்சேரி, அருண் மொழி, ஸ்ரீபுரந்தான், புதுநடுவலூர், நொச்சியம்பாளையம், செல்லியம் பாளையம், பொம்மனாப்பாடி, டி.களத்தூர், கண்ணாப்பாடி, புதூர், மேட்டுப்பாளையம், அம்மாபாளையம், லாடபுரம், ஏரிக்கரை, தேனூர், சின்னவெண்மணி, பெரிய வெண்மணி, நக்க சேலம், ஆலம்பாடி, எசனை, வெங்கனூர், அண்ணிமங்கலம் போன்ற ஊர்களில் இரும்புக் காலப் பண்பாட்டு தொல்லியல் எச்சங்களும் உள்ளன.

கல்வட்டம், கற்பதுக்கை, கற்குவை போன்றவை ஏரிக்கரை, தேனூர், புதுநடுவலூர், டி.களத்தூர் அகிய ஊர்களிலும் காணப்படுகின்றன. இதுவரை இங்கு குறிப்பிட்டுக் காட்டப்பட்ட இடங்கள் மிகக் குறைவானதே ஆகும். பல ஊர்களில் பெருங் கற்காலத் தொல்லியல் எச்சங்கள் மிகுதியாக உள்ளன. அவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் கடல்சார் ஆய்வுகளும் நிகழ்த்த வேண்டியுள்ளது. இதில் நாம் சில தூரம்தான் கடந்துள்ளோம்.செங்கல்பட்டு பாலூர் பகுதி, தாம்பரம் மணிமங்கலம் பகுதி, செங்கம் பகுதி, தருமபுரி, கிருஷ்ணகிரி முதலான ஊர்களில் அகழாய்வுப் பணியினைச் செய்து முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும். இவ்வாறு வடஆர்க்காட்டு மாவட்டத்தை அடுத்து தஞ்சை, மதுரை, நெல்லை முதலான ஊர்களுக்குச் சென்றால் அங்கும் ஆய்வுகள் செய்ய வேண்டிய பல தொல்லியல் இடங்கள் உள்ளன. இவையெல்லாம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு தொல்லியல் பொருட்கள் எல்லாம் வெளியே எடுக்கப்பட்டால் பல ஏக்கர் பரப்பில் அருங்காட்சியகமே அமைக்க நேரிடும். தொல்லியல் ஆய்வு முடிவுகளைப் பல்லாயிரம் பக்கங்களில் அச்சடிக்க நேரிடும்.

(நிறைந்தது)

Leave a Reply

You must be logged in to post a comment.