திருப்பூர், மார்ச் 11 –
சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என சாலைப் பணியாளர் சங்க திருப்பூர் கோட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் திருப்பூர் கோட்டம் 3 ஆவது மாநாடு காங்கயத்தில் சனியன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கோட்டத் தலைவர் ஆர்.ராமன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். செயலாளர் என்.சிவக்குமாரன், பொருளாளர் கருப்பன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்து பேசினர். இதைத்தொடர்ந்து அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன், காங்கேயம் வட்டக்கிளை தலைவர் என்.ஸ்ரீதர், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ராமசாமி, நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முத்துசாமி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகி பி.ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ.அம்சராஜ் நிறைவுரை ஆற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு இம்மாநாட்டில் கோட்டத் தலைவராக என்.சிவக்குமாரன், கோட்டச் செயலாளராக ஆர்.ராமன், பொருளாளராக ஆர்.கருப்பன், துணைத் தலைவராக பி.அம்மாசை, சந்திரன், கோட்ட இணைச் செயலாளராக விஸ்வநாதன், சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.மணிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக கோட்டத் துணைத் தலைவர் பி.முருகன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.