கோவை நகரில் பெரியகுளம், முத்தண்ணன்குளம், ஓட்டைக்குளம், செல்வசிந்தாமணிகுளம், கிருஷ்ணாம்பதிகுளம், சிங்காநல்லூர்குளம், குறிச்சிக்குளம், வாலாங்குளம் என்று ஒன்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. நொய்யல் ஆற்றில் இருந்து வருகிற நீரால் ஒவ்வொரு குளங்களும் நிறையும் வகையில் இந்த குளங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது நொய்யல் ஆற்றுப்பாதை முழுமையும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக காட்சியளிக்கிறது.

மறுபுறம் கோவையின் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு நீராதாரமாய் இருக்கிற குளங்களும் தற்போது சீரழிவில் சிக்கியுள்ளது. குறிப்பாக, குளங்களுக்கு மழையை விட்டால் நாதி இல்லை என்ற நிலையில் தற்போது கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களில் கட்டிடக்கழிவுகள், நிறுவன கழிவுகள், குடியிருப்பு கழிவுகள் ஆகியவற்றை கொட்டி குளங்களின் அடையாளத்தை அழித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை பூசாரிபாளையம் அருகில் உள்ளது ஓட்டை குளம். இக்குளம் தொடர்ந்து நீர் கசிந்து முத்தண்ணன் குளத்திற்கு செல்வதால் இக்குளத்திற்கு ஓட்டைக்குளம் என்று பெயர் வந்ததாய் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், கோடை காலத்தில் வெயிலின் அளவு எவ்வளவு கூடினாலும் இந்த குளம் குடியிருப்பு அருகில் இருப்பதால் எப்பவுமே எங்களுக்கு குளுமைதான். ஆனால் சமீப காலமா மாநகரில் இடிக்கப்படும் கட்டிடங்களின் கழிவுகளை இரவு நேரத்தில் இந்த குளத்தில் கொட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இறைச்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் என எல்லா கழிவுகளும் இந்த குளத்தில்தான் கொட்டப்படுகிறது.

இதுமட்டுமின்றி அருகிலுள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் ரசாயன கழிவு, வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கழிவு என குப்பை கிடங்காகவே குளத்தை மாற்றிவிட்டனர். இதனால் இங்க இருக்கிற பாலத்தை முன்னர் நொய்யல் பாலம்னு அழைத்து வந்த மக்கள், தற்போது நுரைப் பாலம்னு சொல்கிற அளவுக்கு கழிவுகள் நிரம்பிக் கிடக்கிறது என வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும், ஆகாயத் தாமரையை அகற்றப் போகிறோம். தூர்வாரப் போகிறோம் என்று அவ்வப்போது குளத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளால் கோவை மக்களுக்கு பயன் இருகிறதோ, இல்லையோ காண்ட்ராக்டர்களுக்கும், கமிசன் பெருபவர்களுக்கும் நன்றாக பயன்தருகிறது என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

(ந.நி)

Leave A Reply

%d bloggers like this: