திருப்பூர், மார்ச் 11 –
ஊதியூர் அருகே விவசாய நிலங்களில் இருந்து முறைகேடாக இரவு பகலாக டிப்பர் லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். இது குறித்து கனிமவளத்துறை மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றனர் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் ஊதியூர் நிழலி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து அரசு அனுமதி பெற்றிருப்பதாகக் கூறிக் கொண்டு இரவு, பகல் பாராமல் கிராவல் மண் எடுக்கப்படுகிறது. வஞ்சிபாளையம் பிரிவு மற்றும் கொடுவாய் வழியாக திருப்பூர் நோக்கி மிகப்பெரிய கனரக வாகனமான டிப்பர் லாரிகள் மூலமாக தினசரி நூறுக்கும் மேற்பட்ட லோடுகள் எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும் நிழலி கிராமம் சர்வே எண் 1082 நிலத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று சொல்லி 25 அடி ஆழம் வரை கிராவல் மண் எடுக்கப்பட்டுள்ளது. வஞ்சிபாளையம் பிரிவில் இருந்து தெற்கே ஒரு கிலோ மிட்டர் தூரத்தில் உள்ள பொதுப்பணித்துறை வாய்க்கால் ஜீப் ரோட்டில் கிராவல் மண் எடுக்க பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்த ஜீப் பாதையை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தடை உள்ளது.

எனினும், எவ்வித தடையும் இல்லாமல் இந்த சாலையிலேயே டிப்பர் லாரிகளில் கிராவல் மண் கொண்டு செல்லப்படுகிறது. இயற்கை வளத்தைச் சூறையாடும் இந்த செயல் கடந்த ஆறேழு மாதங்களாக நடைபெற்று வருவதாக சங்கரண்டாம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் என்பவர் கூறுகிறார். மேலும், இந்த தகவலை காங்கேயம் வட்டாட்சியரிடம் தொலைபேசியில் தெரிவித்தபொழுது அது எங்களுக்கு சம்மந்தம் கிடையாது என்றும் கனிம வளத்துறை உதவி இயக்குநரிடம் புகார் அளிக்கும்படியும் கூறினார். எனவே ,கனிமவளத் துறை உதவி இயக்குநரைத் தொடர்பு கொண்டு தெரிவித்தபோது அவரும் உரிய பதில் அளிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ உறுதியளிக்காமல் தட்டிக்கழித்து விட்டார் என தெரிவிக்கிறார். கிராவல் மண் ஒரு லோடு சுமார் ரூ.5 ஆயிரம் என வைத்துக் கொண்டாலும் நாளொன்றுக்கு ரூ.5 லட்சம் என்ற மதிப்பில் பல மாதங்களாக கோடிக்கணக்கான ரூபாய் மண் இவ்வாறு முறைகேடாக அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபடுவோர் ஆளும் கட்சியின் அரசியல் பின்பலத்துடன், பணபலம் படைத்தவர்களாகவும் இருப்பதாக தெரிகிறது. எனவேதான் அரசு நிர்வாகம் இந்த முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்றும் இந்த வட்டார விவசாயிகள் கூறுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: