திருவள்ளூர், மார்ச் 11-
திரிபுராவில் ஜனநாயக படுகொலையை, கண்டித்தும் வன்முறையைத் தூண்டும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைதுசெய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளுர் மாவட்டக்குழு சார்பில் புதனன்று ரயில்நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசுகையில், தோழர் லெனின், பகுத்தறிவு பகலவன்பெரியார் சிலைகளை உடைத்தால் அவர்களின் சித்தாந்தத்தை அழித்துவிடலாம் என பாஜக நினைக்கிறது. அது ஒரு நாளும் நடக்காது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் கல்வி, சுகாதாரம் என எல்லாவற்றிலும் முதன்மையான மாநிலமாக திகழ்ந்த திரிபுரா மாநிலம் தற்போது புதியதாகஆட்சிக்கு வந்துள்ள பாஜகவால் கலவர பூமியாக மாறியுள்ளது பதவியேற்கும் முன்பே வெற்றியின் மமதையில் ஆளுநர் துணைக் கொண்டு ராணுவத்தை வைத்துக் கொண்டு100க்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களையும் 1000க்கணக்கான தோழர்களின் வீடுகளையும் தொழிற்சங்க கட்டிடங்களையும் சேதப்படுத்தியதோடு பொதுமக்களையும் பாஜகவினர் தாக்கியுள்ளனர்.

உலக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிற மாமேதை லெனின் சிலையை இடித்துள்ளனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் ஹிட்லர், முசோலினி பின்பற்றிய பாசிச அணுகுமுறையை கையாள்கின்றனர். தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்பேன் என அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசுகிறார்
தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிற தலைவரின் சிலையை உடைப்பேன் ன சொல்லி கலவரத்தை தூண்டப் பார்க்கிறார். ஏற்கனவே இதுபோல் பலமுறை பேசியிருக்கிறார். காவல்துறை உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.பேசிவிட்டு பேசவில்லை என்று பொய் சொல்வது அவர்களின் வழக்கமான பாணி. இதேபோல் உபியில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.கருத்தோடு மோதமுடியாமல் வன்முறையை கையாள்வது ஆர்எஸ்எஸ்ன் அடிப்படை குணாம்சம். மாற்றுக் கருத்தை சொன்னதற்காக கல்புர்கி, தபோல்கர், பன்சாரே கடைசியாக கௌரி லங்கேஷ் வரை இந்து அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டனர். கௌரி லங்கேஷ் கொலையை கண்டிக்கும் நடிகர் பிரகாஷ் ராஜை மிரட்டுகின்றனர்.எனவே இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க சட்ட ஒழுங்கை காப்பாற்ற உரிய நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.