பெங்களூரு:
இந்திய வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவின் கடன்களை அடைக்கத் தயார் என அவருக்கு சொந்தமான, ‘யுனைடெட் ப்ரீவெரிஸ்’ என்ற மது நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா விடுத்த கோரிக்கையின் பெயரில் விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை இங்கிலாந்து நீதிமன்றம் முடக்கியுள்ள நிலையில், அந்த நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது.மல்லையா பெற்ற கடன் தொடர்பான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையாவுக்குச் சொந்தமான ‘கிங் பிஷர்’ விமான நிறுவனம் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்த தயாராக உள்ளதாக யுனைடெட் ப்ரீவெரிஸ் நிறுவனம் கர்நாடகா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

‘யுனைடெட் ப்ரீவெரிஸ்’ நிறுவனத்திடம் ரூ. 12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், அவற்றை விற்று கிங்பிஷர் நிறுவனம் பெற்ற ரூ. 6 ஆயிரம் கோடி கடனை, வட்டியுடன் செலுத்த தயார் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுனைடெட் ப்ரீவெரிஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் ரூ. 13 ஆயிரத்து 400 கோடியாக இருந்ததாகவும், சந்தை நிலவரங்களின் காரணமாக அது தற்போது ரூ. 12 ஆயிரத்து 400 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவின் கடன் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இங்கிலாந்தில் விஜய் மல்லையா ‘ஆரஞ்சு இந்தியா கோல்டிங்ஸ்’, ‘யுனைடெட் ப்ரீவெரிஸ்’ நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். மேலும், இங்கிலாந்து விர்ஜின் தீவுகளிலும் அவருக்கு சொந்தமாக இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.