புதுதில்லி, மார்ச் 10-

திரிபுரா மாநிலத்தில் சாரிலம் தொகுதிக்கான தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடுவதில்லை என்று இடது முன்னணி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக திரிபுரா இடது முன்னணியின் கன்வீனரும், திரிபுரா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பியிருக்கம் கடிதம் வருமாறு:

திரிபுரா இடது முன்னணி சார்பாக மார்ச் 8ஆம் தேதியன்று சாரிலம் தொகுதிக்கான தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தோம். அதில் மாநிலத்தில் இடது முன்னணிக்கு எதிராக ஏவப்பட்டுள்ள வன்முறை நிகழ்வுகளைப் பட்டியலிட்டிருந்தோம்.

அந்த மனுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சியின் 11 கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன, ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றன மற்றும் தீக்கரையாக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தோம். மேலும் சாரிலம் தொகுதியில்  போக்குவரத்து ஊழியர்களின் சங்க அலுவலகங்கள் இரண்டும் வன்முறைக் கும்பல்களால் வலுக்காட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருந்தோம். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தோம். இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் 19 பேர் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

கடந்த இரண்டு நாட்களில் நிலைமைகள் மேலும் மோசமாகியிருக்கின்றன. மார்ச் 8 அன்று இடதுசாரிக் கட்சி ஆதரவாளர் மத்ய பிராஜ்பூர் என்பவரின் வைக்கோல்போர் தீ வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.  பான்சிபாரி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் தேவ் வர்மா மற்றும் ரவீந்திர தேவ் வர்மா ஆகியவர்களின் ரப்பர் தோட்டங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. பிராஜ்பூரில் இடதுசாரிக் கட்சி  ஆதரவாளர் சுராஜித் தாஸ் என்பவரது அரிசி ஆலை தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கிறது. பிஸ்ரம்கஞ்ச் என்னுமிடத்தில் செயல்பட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகங்கள் தற்சமயம் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றன. ஏனெனில் அவை அனைத்தும் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன மற்றும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. இத்தொகுதியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குச்சாவடி அலுவலகங்களும் பாஜக கயவர்களால் இடித்து தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன.  பாஜக ரவுடிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்காக மிகப்பெரிய அளவில் இடதுசாரிக் கட்சிகளின்  ஆதரவாளர்கள் தொகுதிக்கு வெளியே தங்கி இருக்கின்றனர். இடதுசாரி ஆதரவாளர்களின் குடும்பங்களிலிருந்து மிகப்பெரிய அளவில் பணம் அச்சுறுத்தி வசூலிக்கப்பட்டிருக்கிறது. சாரிலம் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் தொகுதிக்கு வெளியே தங்கவேண்டிய கட்டாயச்சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவரால் தொகுதிக்குள் வர முடியவில்லை. இத்தொகுதியில் பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணியுடன் முடிவடைகிறது. இத்தகைய சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுவது என்பது ஒருசாராருக்கான தேர்தலாக இருக்குமே தவிர வேறெதுவும் கிடையாது. ஜனநாயகத்தின் பெயரால் நடைபெறும் கேலிக்கூத்து என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்பும்வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்கிற எங்கள் வேண்டுகோள் தில்லியில் உள்ள தலைமைத்  தேர்தல் ஆணையரால் பரிசீலிக்கப்படவில்லை. எனவே இன்று நடைபெற்ற திரிபுரா இடது முன்னணி கூட்டத்தில் இந்தத் தேர்தலிலிருந்து இடது முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறார்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.