புதுதில்லி:
இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடையும் வீரர்களுக்கு 100 சதவிகித ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் எப்போதும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆதலால் இங்கு பணிபுரியும் வீரர்கள் உயிரிழந்தாலோ படுகாயமடைந்தாலோ, அவர்கள் இறுதியாக வாங்கிய ஊதியத்தில் 100 சதவிகிதம் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியமாக இதுவரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் பணிபுரியும் வீரர்களுக்கும் இந்த ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த வருடம் ஜூன் மாதம் டோக்லம் பகுதியில் சீன ராணுவம் முகாம்களை அமைத்தபோது இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளும் அங்கு படைகளைக் குவித்ததால் போர் பதற்றம் உருவாகியிருந்தது. இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், 73 நாட்களுக்குப் பிறகு இரு நாடுகளும் தங்களது படைகளை எல்லையிலிருந்து வாபஸ் பெற்றன.

டோக்லம் பிரச்சினைக்குப் பின் இரு நாடுகளிடையேயான எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்திய – சீன எல்லையில் தற்போது பதட்டமான சூழல் நிலவுவதாக மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பம்ரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.