சென்னை:
சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் என்று கீழடி அகழாய்வு மூலம் தெரியவந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியாக கீழடியில்தான் பெரிய அளவிலான அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கீழடியில் கிடைத்து இருக்கும் தமிழ் எழுத்துக்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. இதுநாள்வரை கூறப்பட்டு வந்த வரலாற்றை மொத்தமாக மாற்றும் வகையில் இந்த செய்திகள் அமைந்துள்ளன. 2017-இல் நடத்தப்பட்ட அகழாய்வு முடிவுகளின் படி கீழடியில் கிடைத்த பொருட்கள் மிகவும் பழமையானவையாக உள்ளன. அங்கு கிடைத்த வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் 2200 ஆண்டுகள் பழமையானது என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், இதுதான் மிகவும் பழமையான நாகரிகம் என்று மதிப்பிடப்படுகிறது.

மேலும், கீழடியில் காணப்பட்டது அனைத்தும் தமிழ் எழுத்துக்கள். அதிலும் பழைய தமிழ் எழுத்து முறைகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அத்துடன், சங்க கால தமிழ் ஓலைச்சுவடிகளைச் போலவே இந்த எழுத்துக்கள் இருக்கின்றன. இந்த மாதிரியான எழுத்துக்கள் சிந்து சமவெளி ஆய்விலும் கிடைத்து இருப்பதால், சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி தமிழ்மொழிதான் என்றும், அங்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகள் என்றும் ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கீழடியில் நடத்தப்படும் ஆய்வுகள் பல முக்கியமான வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் என்று சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.