காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சியின் மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் (மார்ச் 10-11) மாநிலக்குழுக்கூட்டம் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் என். சங்கரய்யா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, அ.சவுந்தரராசன், பி. சம்பத் உள்பட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ந் தேதி
தீர்ப்பளித்தது. அதில், ஆறுவாரகாலத்திற்குள் தீர்ப்பை அமல்படுத்திட வேண்டுமென்று
கால வரன்முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு தீர்ப்பை அமல்படுத்துவதற்கு பதிலாக காலங்கடத்தும் தந்திரத்தை மேற்கொண்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திட நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்துள்ளது. இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கால தாமதம் ஏற்படும் என்ற அச்சம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை மத்திய – மாநில அரசுகளுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
தீர்ப்பில் ‘செயல் திட்டம்’ என்று குறிப்பிட்டிருப்பது காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைப்பது தொடர்பான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டுமென்பதைத்தான் குறிப்பிடுகிறது என்பதை அழுத்தமாக குறிப்பிட விரும்புகிறோம்.
எனவே, மத்திய அரசு, அரசியல் லாபங்கருதி ஒருதலைபட்சமான போக்கை கைவிட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை
வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைத்திட தேவையான
நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தமிழகத்துக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை எதிர்த்து, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். மத்திய அரசின் தந்திரத்திற்கு தமிழக அரசு அடிபணிந்து விடக்கூடாது. காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை உரிய காலத்திற்குள் அமல்படுத்துவதற்கு உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்கும் வகையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு 2018 பிப்ரவரி 17-20 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்றது. இம்மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்திய மாநாட்டு வரவேற்புக்குழுவிற்கு மாநிலக்குழு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. குறிப்பாக வரவேற்புக்குழு தலைவர் தோழர் க. கனகராஜ், செயலாளர் தோழர் கே.எஸ். அர்ச்சுணன் உட்பட மாநாடு வெற்றிகரமாக நடக்க இரவு – பகல் பாராமல் பணிகளில் ஈடுபட்ட கட்சியின் அனைத்து மட்ட ஊழியர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள், கலைஞர்கள் மற்றும் நிதியளித்தவர்கள் அனைவருக்கும் மாநிலக்குழு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.