புதுதில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். அப்போது முதல் கடந்த 10 நாட்களாக அவரை தங்களின் காவலில் எடுத்து சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, இதே வழக்கில் அமலாக்கத்துறையும் தன்னை கைது செய்யலாம் என்று கருதிய கார்த்தி சிதம்பரம், தில்லி உயர் நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்றமும் அதை ஏற்று, கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், மார்ச் 20-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்ததற்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், தனது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.