மனிதபிம்பத்தின் பிரதிபலிப்புகள் யாவும் உணர்வுகளால் கட்ட
மைக்கப்பட்டவை. உணர்வுகள் முட்டிமோதி வெளிப்படும்போதே மனிதம் கொஞ்சமேனும் எட்டிப்பார்க்கச் செய்கிறது.ஒருவருக்கொருவர் நமக்குள்ளாகப் போர்த்தியிருக்கும் வெற்று மூடாப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாய் கிழித்துப்போடுவதோடு, நமக்குள்ளாக அவ்வப்போது வெடித்தெழும் உணர்வுப்பிழம்புகளை ஒவ்வொரு காட்சியோடும் அதனூடாக நிழலாடும் கதாபாத்திரங்களின் உளப்போராட்டத்தோடும் நம்மை நாமே உரசிப்பார்க்க செய்திருக்கிறது செல்லாத பணம்.

உணர்வுகளுக்கிடையிலான ஊடாட்டமும் உணர்வுப் பிரவாகமும் என்னவாகவெல்லாம் மனித எண்ணங்களை பரிமாணமடையச் செய்கிறது, அது எத்தகைய முரணியக்க சூழலுக்கெல்லாம் நம்மைக் கொண்டு சேர்க்கிறது என்பதை வாழ்வியல் அனுபவத்தோடும் அவற்றுக்குள்ளான சிக்கல்களோடும் மிகநுட்பமாக இந்நாவலின் வழியே உளப்பகுப்பாய்வு செய்திருக்கிறார் இமையம்.உணர்வுகள் அற்று இருந்தால் அதை சடம் என்று தானே சொல்வோம்.ஒருவகையில் இது சடத்தின் கதையும் கூட. இன்னொரு வகையில் உணர்வுள்ள சடங்களின் கதையு மாகும்.
பார்த்தமாத்திரத்தில் காதல்.இது காதலுக்கு மட்டுமே வாய்க்கும் பேரதிசயம். அதனால் தான் இன்றைக்கு வரைக்கும் அது புதுமையானதாகவும் புரட்சிகரமானதாகவும் இருந்துவரு
கிறது. இதனாலேயே அது எதிர்பாராத பல சிக்கல்களையும் வலிந்து பெற்றுக்கொள்ளவும் செய்கிறது. அதுவே வாழ்க்கைக்கான தொடர்பிரச்சனையாகவும் நீடித்துவிடுகிறது.

படிப்பறிவில்லாத ஆட்டோ ஓட்டும் ஒரு முரட்டுக் குடிகாரனை என்ஜினியரிங்கில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெண் காதலிக்கத் துவங்குகிறாள் .பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவனைத்தான் கட்டுவேன் ஓடிப்போகமாட்டேன்.நீங்களே திருமணம் செய்துவையுங்கள். இல்லையென்றால் யாரையும் கட்டிக்கொள்ளமாட்டேன் என்பதான பிடிவாதத்தால் திருமணமும் செய்து வைக்கிறார்கள்.

திருமணம் ஆன கையோடு பெண்ணுக்கும் அவளுடைய வீட்டுக்குமான தொடர்பு அறுத்துப்போடப்படுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் தெரியாமல் தாய் மட்டும் மறைமுகமாக பேசிக்கொண்டும் பணம் கொடுத்தும் உதவி வருகிறாள்.இதற்கு இடையே குடித்துவிட்டு வந்து தினம் அடிப்பது பக்கத்து வீட்டில் ஓடிஒளிந்துகொள்வது.வேலைக்கு போக அனுமதிக்காதது என தொடரும் பிரச்சனைகளைத் தாயிடம் மட்டுமே சொல்லி அழுகிறாள்.

அப்பவே சொன்னமே நீகேட்டியா இதெல்லாம் உனக்குத் தேவையா? இத எப்படி உங்க அப்பாகிட்டயும் அண்ணங்கிட்டயும் சொல்லுவேன் என தாயும் புலம்புகிறாள். இப்படியான ஒருநாள் தான் உங்கபொண்ணு கொளுத்திகிச்சி என்கிற தகவல் வர….. அதுநாள் வரை வைராக்கியத்தோடு பேசாமல் ஒதுங்கியே இருந்து வந்த தந்தை பதறிஅடித்துக்கொண்டு பணத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்படுகிறார். சேதி கேள்விப்பட்டு தந்தையைப் போலவே பேசாமல் இருந்து வந்த அண்ணனும் பணத்தை எடுத்துக்கொண்டு புறப்படுகிறான்.இதுநாள் வரையிலான அவர்களின் கௌரவம் அந்த இடத்தில் நொறுங்கிப்போகிறது.பாசமே முன்னுக்கு நிற்கிறது.அப்பனும் புள்ளையும் இப்ப இம்மாம் பணத்த தூக்கிட்டுவந்து ஆஸ்பத்திரி வாசல்ல காத்துக்கிட்டு நிக்குறிங்களே அத அப்பவே அவகிட்ட கொடுத்திருந்தா அவனாச்சும் நாலஞ்சி ஆட்டோவ சொந்தமா வாங்கி ஓட்டி இருப்பானே,

எம்மவளும் அந்தக் குடிகாரப் பயகிட்ட அடி ஒத வாங்காம இருந்திருப்பாளே! இப்ப எல்லாம் போச்சே. நான்என்ன செய்வன் என்கிற அந்தத் தாயின் அழுகையும் கதறலும் தான் நாம் காண மறுக்கிற வாழ்க்கைப் பாடம். கௌரவம் என்கிற வெற்று மூடாப்பில் நாம் எதையெல்லாம் இழந்துகொண்டிருக்கிறோம். இன்னும் எதையெல்லாம் இழக்கப்போகிறோம் என்பதை உணர்த்திச் செல்வதாக இருக்கிறது கதை.

பணத்திற்கான அங்கீகாரம் எல்லா இடத்திலும் செல்லுபடியாகுமா…. அது எல்லா இடத்திலும் தன்வேலையை செய்யமுடியுமா என்கிற கேள்வியை முன்வைத்திருப்பதோடு, அப்படியான பணத்தைத்தான் நாம் பெரிதாகக் கருதுகிறோம். அதற்காகவே பலரையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம் என்பதை மிகநுணுக்கமாகவே கையாண்டி
ருக்கிறது இந்நாவல் என்றால் அது மிகையாகாது.

பிரச்சனைகள் நம்மைச்சூழ்ந்து இருக்கிறபோதும் நாம் பல்வேறு கூறுகளால் பிளவுபட்டுக்கிடக்கிறோம். சிலது நம்மீது திணிக்கப்பட்டவை, சிலது நாமாகவே திணித்துக்கொண்டவை.பணமும் பட்டமும் சாதியும் மதமும்
சாவப்பிழைக்கக் கிடக்கும் போது என்ன செய்துவிடமுடியும்.வீராப்பை
யும் வெட்டி கௌரவத்தையும் தூக்கியெறியுங்கள், மனிதர்களை நேசிக்கத் துவங்குங்கள் என்கிறது நாவல்.ஏனென்றால் வாழ்க்கை ஒருமுறை தானே!

ஆசிரியர்: இமையம்
வெளியீடு: க்ரியா பதிப்பகம்
புதிய எண் 120, பழைய எண் 10,
ராமகிருஷ்ண மடம் சாலை,
(ராமகிருஷ்ண மடம் தர்ம
மருத்துவமனை எதிரில்)
மயிலாப்பூர், சென்னை – 600 004
கைபேசி: 95516 61806
பக்கம்: 224 விலை: ரூ. 285                      ச.மதுசுதன்

Leave a Reply

You must be logged in to post a comment.