சமூகமாற்றம் ஏற்படவேண்டுமானால் சிந்தனையில் மாற்றம் ஏற்படவேண்டும். ஒரு கருத்து பௌத்தீக சக்தியாக மாறி சிந்தனையைப் பட்டை தீட்டப் பயன்படுவதில் நூல்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அதற்காக ஓர் இயக்கம் செய்ய வேண்டிய பணிகளை இயக்கம் போல் தனி மனிதராய் செய்துவருபவர் அலைகள் பெ.நா. சிவம். அவரது பெயரோடு ஒட்டி இணைபிரியாதிருக்கும் அலைகள் நூல்களை வெளியிடும் அமைப்பு. இளைய
தலைமுறைக்குத் தேவையான நூல்கலையும் பிற நாட்டு நூல்களை மொழியாக்கம் செய்தும் வெளியிட்டு வருகின்ற தமிழகம் பேசும் வெளியீட்டாளர்களில் ஒருவராகவும் விளங்குபவர் அவர். தத்துவப் புரிதலும் சமுதாயப் படிப்பும் உள்ள போதும் நூலெழுதி தமது வெளியீட்டகத்தில் பதிப்பிக்காதவர். 70 வயதை நெருங்கி கொண்டிருக்கும் அவர் இப்போது ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார்.

எப்போதோ கொஞ்சம் எழுதிப்பார்த்தது இப்போது உங்கள் கையில் பூத்தது என்கிற அறிமுகத்தோடு அவர் வெளியிட்டிருக்கும் நூல் “ என் காலத்தில் சில கவிதைகள்” எப்போதோ கொஞ்சம் எழுதிப் பார்த்தது என்பதையே நூலின் தலைப்பாக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இளமைக் காலத்தில் அவர் எழுதிய, கவியரங்குகளில் பாடிய கவிதைகளில் கொஞ்சம்தான் நூலின் உள்ளடக்கம். கவிஞர் வாழ்த்து என்பது முதலாக ஒரு நூற்றாண்டு முடிகிறது என்பது ஈறாக 43 கவிதைகள் உள்ளன.

இவை இளமையின் கீதங்கள் என்பதை எழுச்சியிலிருந்தும் ஆவேசச் சொற்களிலிருந்தும் அறிய முடிகிறது. படைப்பாளியின் அறச்சீற்றம் படிப்பாளியையும் தொற்றிக்கொள்கிறது.மகன் தந்தைக் காற்றும் நன்றியாக முனைவர் சி. இளங்கோ படிப்புரை எழுதியிருக்கிறார். அவர் மிகச் சரியாகவே சுட்டிக் காட்டியிருப்பது போல் “ அதோபோகின்றான்… ” என்கிற கவிதையை எந்த ஆண்டில் எழுதினார் என்பதற்கான குறிப்பில்லை. அது இப்போது பொருந்துகிறது என்பதுதான் சிறப்பு. அரசியல் வாதிகளில் ஏமாற்றுக்காரர்களாய் இருப்பவர்களைப் பொதுவாகப் படம் பிடிக்கிறது . அவசியம் படிக்க வேண்டிய கவிதை. எந்த வயதுக் காரரையும் கிளர்ச்சியுறச் செய்யும் கவிதை.

வீரம், பொங்கல், பொதுவுடைமை, சபதம், தோழன், அவசரநிலை என எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளும் சமகால சமூக நிலைமைகளைக் கண் முன் நிறுத்துகின்றன. காவிரி நாடன் அவர்களால் வழிநடத்தப்பட்ட எழுத்துலகம் என்ற கவிஞர்களுக்கான அமைப்புக்கு எழுதிய கவிதைகள் அதிக பட்சமாக 10 பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.

மார்க்ஸ், லெனின், பெரியார், பாவேந்தர், பட்டுக்கோட்டை, வள்ளலார் என சிவம் அவர்கள் தேர்வு செய்த மாந்தர்களிலிருந்தே அவரது சிந்தனைப் பாதையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
“ஈரோட்டுப் பெரியாரின் கைத்துப்பாக்கி/ இழிவுகனைப் பொசுக்குகின்ற பெருந்தீ நாக்கு/ போராட்டம் வருமுன்னே பரணிபாட/ புறப்பட்ட பாவேந்தன், தமிழன்னைக்குத் தேரோட்டும் சாரதியாய் சீர்திருத்தத் / தெருவினிலே வலம்வந்தோன்! ஈ.வெ.ராவின் / பாராட்டைப் பெற்ற
ஒரே தமிழ் புலவன்/ பகுத்தறிவுப் பாசறையின் ஒளி
விளக்கு ! ”

பெரியாரையும் பாவேந்தரையும் இணைத்து நோக்கும் கவிதையைப் போல பாரதியையும் பாவேந்தரையும் இணைத்து பார்க்க இயலாத மனநிலை அவருக்கு இருந்தது போல் தெரிகிறது. பட்டுகோட்டைக்கு இணையாக, இன்னும் கூடுதல் அதிகம் பன்முக ஆளுமையாக இருந்த தமிழ் ஒளியையும் அவரது கவிதை உள்ளடக்காதது ஏன் என்பதும் கேள்விக் குறிதான்.
பெரியாரைக் கவிஞரின் மனம் மிகவும் நெருங்கி நேசித்ததை அவர் மறைந்த போது எழுதிய கவிதை காட்டுகிறது. ‘ கால் ’ என்ற சொல் திரும்பத் திரும்ப வருமாறு எழுதப்பட்டுள்ள அக்கவிதை உணர்வு வெளிப்பாட்டின் உச்சமாக உள்ளது.

“சிங்கக்கால் சிதைந்த/ கால் சிறுநரிகள் சிரித்தக்கால்/ தந்தக்கால் தந்தைக்கால் தன்மானந் தாங்குங்கால் / மங்குங்கால் தமிழ் வீரம் மானத்தைக் காத்தக்கால்/ எங்கள் கால் நினைவிழக்க ஏன் மறைந்தாய் என் தலைவா ”

‘ தனிக்கொடி ’ என்ற புனை பெயரில் இக்கவிதை நாத்திகம் நாளேட்டில் எழுதப்பட்டதாக அடிக் குறிப்பு உள்ளது. அந்தப் புனை பெயர் கவிதை மட்டுமல்ல அலைகள் சிவம் அவர்களின் ஒவ்வொரு கவிதையும் ‘ தனிக்கொடி ’ கட்டித்தான் பறக்கிறது . நினைவு அடுக்கு
களில் எஞ்சிய கவிதைகள் இருந்தாலும் தருவது வரலாற்று வாசிப்புக்குப் பயன்படும்.

என் காலத்தில் சில கவிதைகள்
ஆசிரியர்: அலைகள் சிவம்
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
5/1ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர்,
இராமாபுரம், சென்னை-600089.
கைபேசி – 9841775112, 94444 31344.
பக்கம் :96, ரூ.70.

மயிலைபாலு

Leave a Reply

You must be logged in to post a comment.