லக்னோ,

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த தினங்களுக்கு முன் வன்முறையை தூண்டும் வகையில் திரிபுராவில்  ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை பாஜக தொண்டர்கள் தகர்த்தனர்.  இதைத்தொடர்ந்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா திரிபுராவில்  லெனின் சிலை இடிக்கப்பட்டது போல்  தமிழகத்தில் பெரியார் சிலைகள் தகர்க்கப்படும்  என்று தனது முகநூல் பதிவிட்டு பின்னர் அதை அழித்து விட்டார்.

இதன் நீட்சியாக தமிழகத்திலும் சில இடங்களில் பெரியார், மற்றும்  அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.  உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. சிலைகள் சேதப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து நாடுமுழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவானது. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும், சிலைகளுக்கும்  உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் அசம்கர் நகரில் அம்பேத்கர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கரின் முழு உருவச்சிலையில் தலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து  காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.