புதுதில்லி:
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் 16 பில்லியன் டாலர்கள் அளவிலான 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் அமைச்சர்களுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமையன்று இரவு இந்தியா வந்தடைந்தார். அவர்களை, தில்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார்.இந்நிலையில், சனிக்கிழமையன்று இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில், இம்மானுவேல் மெக்ரானிற்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மெக்ரானை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பேசிய மெக்ரான், “இந்தியாவிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது; சென்ற ஆண்டு மோடி பிரான்ஸ் வந்த போது என்னை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்; இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு துறை ஒத்துழைப்பில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்; இருநாடுகளுக்கிடையே நல்ல உறவு உள்ளது. இந்த உறவு வரலாற்று சிறப்புமிக்கது” என்று கூறினார்.

அதன்பின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் இம்மானுவேல் மெக்ரான் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.
அடுத்ததாக தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்குச் சென்ற மெக்ரான், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து, இருநாட்டுத் தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்தினர்.அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு, அணு எரிசக்தி, இருநாடுகளுக்கு இடையிலான ரகசிய தகவல் பரிமாற்ற தடுப்பு உள்பட 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரான்ஸ் நிறுவனத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் வாங்குதல், நீர்நிலைகளை நவீனப்படுத்துதல், இந்தியாவின் ஸ்டெர்லைட் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஏர் லிக்விட் நிறுவனத்துக்கு இடையில் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு உற்பத்தி உள்பட 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மின் தேவை அதிகம் உள்ள இந்தியாவுக்கு பிரான்சில் தயாரிக்கப்பட்ட ஆறு அணு உலைகளை விற்கும் ஒப்பந்தமும் இதில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இந்தியாவில் 20 கோடி யூரோக்கள் அளவிலான தொழில் முதலீடுகளை செய்ய பிரான்ஸ் முன்வந்துள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.