புதுதில்லி:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் ஆப்டிகல் திட்டப் பணிகளுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமையன்று, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியிருப்பதாவது:
“பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் ஃபைபர் ஆப்டிகல் இணைய வசதி அளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் ரூ. 13 ஆயிரத்து 334 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.தற்போது இரண்டாம் கட்டமாக ரூ. 6 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ. 5 ஆயிரத்து 774 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
மேலும், அருணாசல பிரதேசத்தின் கிராமப்புற பகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களுக்கும் மொபைல் நெட்வொர்க் சேவை வழங்குவதற்காக ரூ. ஆயிரத்து 975 கோடியே 38 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 295 கோடியே 97 லட்சம் நிதியில் நெட்வொர்க் பரவலாக்கத் திட்டப் பணிகளும், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டத்திற்கு ரூ. ஆயிரத்து 900 கோடியும், லட்சத்தீவுகளில் சேட்டிலைட் பேண்ட்வித் அமைக்க ரூ. 120 கோடியே 49 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வைஃபை ஹாட்ஸ்பாட் அமைக்கவும் ரூ. 940 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.