சென்னை:                                                                                                                                                                              விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:                                                                                                                                                 நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் திரு. அய்யாக்கண்ணு மீதான பாஜகவினரின் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.விவசாயிகள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், கோரிக்கைகளை முன்வைத்தும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் அருகில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கிக் கொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவர் நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்ததோடு, செருப்பை எடுத்துக்காட்டி இழிவாகப் பேசி மிரட்டியுள்ளார். நோட்டீஸ் கொடுப்பதையும் பாஜகவினர் தடுத்துள்ளனர்.

ஜனநாயக நாட்டில் தங்களது கருத்தை முன்வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்கு மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்க வேண்டுமே தவிர, தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்கக் கூடியதல்ல. மத்தியில் உள்ள மோடி அரசுக்கு எதிராக அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளை மோடி அரசு தொடர்ந்து வஞ்சித்து வரும் நிலையில் அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதைக் கூட பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராசன் தாக்குதலை நியாயப்படுத்தியதும், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தாக்கியவர்களை பாராட்டியதும் அநாகரீகமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.மேலும் அய்யாக்கண்ணுவை தாக்கிய நெல்லையம்மாள் மற்றும் பாஜகவினர் மீது கிரிமினல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.